வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஆளுநர் மீது புகார்.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அதிமுக.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!




சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் தாமதம் செய்வதாகக் கூறி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
 டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதாக புகார் கூறி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுப்பட்டனர். அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 7ம் தேதி அவர் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தில் இல்லாததால் அவர் பொறுப்பேற்பது தள்ளிப் போனது.  இதனிடையே, தற்போது முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று பகீர் உண்மையை உலகிற்கு அறிவித்தார். இதனையடுத்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் அடுக்கடுக்கான பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்வதாக எம்பிக்கள் புகார் கூறினார்கள். அதிமுக எம்பிக்களின் தொடர் அமளியால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

source: kaalaimalar
http://kaalaimalar.net/aiadmk-mps-uproar-parliament-adjourned/