நீரின்றி அமையாது உலகு’. உண்மைதான். அந்த நீர் இல்லாமல் தற்போது நம்முடைய வாழ்வாதாரம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன; கார்ப்பரேட் கம்பெனிகளால் எப்படிக் களவாடப்படுகின்றன; சுற்றுப்புறச் சூழலால் எவ்வாறு மாசுபடுகின்றன; அரசியல்வாதிகளால் எங்ஙனம் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்பது குறித்து விவாதிக்கிறது இந்தத் தொடர்.
நீரின் பிறப்புத் தூய்மையானது... மலை உச்சியில் தோற்றம்பெறும் நதிநீர் எந்தக் கலப்படமும் இல்லாத நன்னீராகத்தான் பிறக்கிறது. மண்ணகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், உணவைத் தருவதற்கும், தன் தூய்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் அது எடுக்கும் முயற்சிகள் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதன்று. தம் மக்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டது பெண்ணை நதி. உணவுக்கு அடிப்படையான நீரை மட்டும் அது வழங்கவில்லை. காடுகளையும் மலைகளையும் கடந்துவந்து, மூலிகைகளுடன் உறவாடி, எந்த நோயும் அணுகமுடியாத எதிர்ப்புச் சக்தியையும் மனிதருக்கு வழங்குகிறது.
‘தூய்மையும், புனிதமும் கொண்ட நதி!’
தென்பெண்ணை, ‘தூய்மையும், புனிதமும் கொண்ட நதி’ வரலாற்றில் பதிவுசெய்யப் பெற்றுள்ளது. தொல் கதைகள் இதற்கான ஆதாரத்தை வழங்குகின்றன. புராணக்கதைகள், நம்ப முடியாத பல்வேறு புனைவுகளைக் கொண்டிருப்பவை என்பது நாம் அறிந்ததுதான். ஆனாலும் அதன் அடியாழத்தில், மானுட வாழ்வின் ஆதிகால உண்மைகள் மறைந்து நிற்பதை, யாராலும் மறுக்க முடியாது.
ஒரு மூத்த கதை சொல்லியின் மூலக்கதையையும்... கற்பனைத் திறன் கொண்ட துணைக் கதைகளையும் தன் புவி பரப்பெங்கும் புதைத்துவைத்துள்ளது தென்பெண்ணை நதி. கண்ணுக்குத் தெரியாத அதன் பிறப்பிடப் புனைவுகள், தனித்தனியான கற்பனை உலகங்களாக விரிந்துகொண்டே செல்கின்றன. இதன் நெடுங்கதை, குறுங்கதைகளில் மறைந்துநிற்கும் மனித மேன்மைகள் நம்மைத் திடுக்கிட வைத்து விடுகின்றன. தொட்டுப் பார்க்க முடியாத, கடந்த காலப்பெருவெளிக்குள் நம்மைக் கைப்பிடித்து இவை அழைத்துச் சென்றுவிடுகின்றன.
சிவனும்... பார்வதியும்!
தென்பெண்ணை நதி பற்றிய தொல்கதைகள் சுவைமிக்கவை. நதி குறித்த கதைகள் அனைத்தும் சிவபெருமானோடும், பார்வதியோடும் தொடர்புபடுத்தி எழுதுதல் இந்திய மரபாக அமைந்துவிட்டது. எந்த மலைகளிலிருந்து நதிகள் தோன்றுகின்றனவோ, அங்கெல்லாம் சிவனும் பார்வதியும் வந்து அந்த நதியை உருவாக்கியதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன.
தென்பெண்ணை நதிக்கு, கர்நாடகத்தில் ‘தட்சண பீனாகினி’ என்று பெயர். இதைப்போலவே, ‘உத்திர பீனாகினி’ என்ற மற்றொரு நதியும் உண்டு. இவை ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளைப்போல, ஒன்றாகவே பிறப்பெடுத்தன. தட்சண பீனாகினி என்னும் தென் பெண்ணை, தமிழகத்துக்குத் தேவைப்படும் நீரை, தன் தலையில் சுமந்து வருவதைப்போலவே, உத்திர பீனாகினி என்னும் வடபெண்ணை, ஆந்திர மாநிலத்துக்கான நீரை எடுத்துச் செல்கிறது. தென்பெண்ணையைவிட, வடபெண்ணை அளவில் பெரியது. பீனாகினி என்பதற்கு, சிவபெருமான் கையில் வைத்துள்ள வில் என்று அர்த்தம் கூறப்படுகிறது. வில்போல் வளைந்து ஓடுவதால் இதற்கு இந்தப் பெயர் வந்ததாக கர்நாடக மக்கள் கூறுகிறார்கள்.
வரலாற்றுக் கதை!
பெண்ணைத் தோன்றியதாகச் சொல்லப்படும் வரலாற்றுக் கதை இது. இன்றைய பெண்ணை நதிகள் ஓடும் ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் போன்ற பரப்பெங்கும் கடுமையான வறட்சி. புல், பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் கருகி மரணமடையும் நிலை. இதனைக் கண்டு சிவபெருமான் வேதனை அடைகிறார். தன் மனைவி பார்வதியை அழைத்து, கட்டளைப் பிறப்பிக்கிறார். பார்வதி தேவி, நந்தி துர்க்கா மலைக்குச் சென்று நதியாக உருமாற்றம் செய்துகொள்கிறார். வடபெண்ணையாகவும் தென்பெண்ணையாகவும் பிறப்பெடுக்கிறார். அந்த நதி இரண்டாகப் பிரிந்து, ஒன்று வடக்கு நோக்கியும்... மற்றொன்று, தெற்கு நோக்கி மலையிறங்கித் தமிழகத்தின் எல்லைக்குள்ளும் நுழைகிறது.
பார்வதியின் மூலம்தான் பிறப்பித்த நதிகளிலேயே பெண்ணை நதி மிகவும் தூய்மையோடு இருக்க வேண்டும் என்று சிவபெருமான் ஆசைப்படுகிறார். கைலாயத்திலிருந்து தோன்றும் கங்கை, புராணக் கதைகளில் தூய்மையின் குறியீடாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும்... தை மாதம் முதல் ஐந்து நாட்கள் கங்கை, நந்திதுர்க்கா மலைக்கு சிவபெருமானால் வரவழைக்கப்படுகிறாள். பெண்ணை நதி தோன்றும் இடத்தில் நீராடுகிறாள். இதன்மூலம் பெண்ணையின் தூய்மை ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது என்று பெண்ணை நதி புராணம் கூறுகிறது.
ஹைதர் அலி - திப்பு சுல்தான்!
கோலார் பகுதியில் சிக்பெல்லபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நந்திதுர்க்கா. மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பு நிறைந்த பகுதி இது. திப்பகிரி, பிரமகிரி, சென்னகேசவ மலை, அரிகரேஸ்வர மலை, கலவரதுர்க்கம் ஆகிவை சூழ்ந்து நிற்க, அதில் தனித்துவத்துடன் நிமிர்ந்து நிற்கிறது, சென்னகேசவ மலை. இது, நந்திதுர்க்காவின் மலைத்தொடர்களில் ஒன்று. சென்னகேசவ மலையின் அடர்ந்த காடுகளில் மலையின் வடபகுதியில் உத்தர பீனாகினியும், தெற்குப் பகுதியில் தட்சண பீனாகினினியும் பிறப்பெடுக்கின்றன.
தென்பெண்ணையில் தொடக்கப் பயணத்தில், மலைசார்ந்த மேட்டுப் பகுதிகளையும் பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கிய இடமாக அறியப்படுவதுதான், தேவனஹள்ளி. மாமன்னர் ஒருவரை ஈன்றெடுத்த பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. குதிரையைப் பராமரிக்கும் வாழ்க்கையில் தொடங்கி, ஒரு புகழ்மிக்க அரசராக வளர்ச்சியடைந்த அந்த மன்னரின் பெயர் ஹைதர் அலி. அவரது வீரம், தைரியம், முயற்சி வரலாற்றில் இன்றும் தனித்துவம் பெற்று நிற்கிறது. அரசக்குடியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆட்சி உரிமை என்பதை வரலாற்றில் மாற்றிக் காட்டிய இவரை வளர்த்தெடுத்த பெருமை, தேவனஹள்ளிக்கு உண்டு.
அவரது மகன் திப்பு சுல்தான் இந்த ஊரில்தான் பிறந்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. நதிக்கரை ஓரத்தில்தான் பல சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி இருக்கின்றன என்கிற கூற்றுக்கேற்ப, பலம் பொருந்திய கோட்டை ஒன்றை, தேவனஹள்ளியில் தந்தையும் மகனும் உருவாக்கியிருக்கிறார்கள். 1791-ம் ஆண்டில் ஆங்கிலத் தளபதி காரன்வாலிஸ் என்பவரால் இந்தக் கோட்டைக் கைப்பற்றப்பட்டது. கோட்டைகளையும், கொத்தளங்களையும் பார்த்துப் பிரம்மிக்கிற நாம், அதற்கு அடிப்படைகளை அமைத்துத் தருகிற நதிகளை மறந்துவிடுகிறோம். நீர் வளமிக்க பெண்ணை நதி, இந்த நகரின் உருவாக்கத்தில் தாயாக நின்று அர்பணிப்பு செய்திருக்கிறது.
துணை நதிகள் சில, இந்தப் பெண்ணையில்தான் சங்கமிக்கின்றன. இதை அடுத்து அமைந்துள்ள மற்றொரு முக்கிய நகரம் ஹாஸ்கோட்டை. பெங்களூருவுக்கு அருகில் என்று சொல்வதைவிட அதன் ஒரு பகுதி என்று இதனைச் சொல்லலாம். இங்கு ‘கட்கடி’ என்னும் பெயர் கொண்ட மற்றொரு ஆறு, தென்பெண்ணையை வந்தடைகிறது. நகரம் என்ற பெருமையைவிட, இங்கு அமைந்துள்ள ஹாஸ்கோட்டை ஏரிதான் நகருக்குக் கூடுதல் பெருமையைத் தந்துள்ளது. பழைய மைசூரு நாட்டிலேயே பெரிய ஏரி என்ற சிறப்பை இது பெற்றுள்ளது. ஏரியின் பெருமை, தென்பெண்ணையால் வந்தது என்பதையும் மறந்துவிட முடியாது.
புராணக் கதைகளில் சொல்லப்பட்டதுபோல, பெண்ணை நதி எப்படி இருக்கிறது, சிவபெருமானின் ஆசையைப்போலத் தூய்மையாக இருக்கிறதா?
http://www.vikatan.com/news/world/79497-corporate-atrocities-and-its-consequences-what-are-we-going-to-do--episode-01.art