வியாழன், 16 பிப்ரவரி, 2017

மரபணு மாற்றுப் பயிர்களை பயிரிட அரசு அனுமதிக்க வேண்டும்: ச.சதாசிவம்

மரபணு மாற்றுப் பயிர்களை பயிரிட மத்திய, மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் மூலக் கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய மரபணு மாற்றுப் பயிர்கள்-ஒரு விஞ்ஞானியின் பார்வை என்ற நூலை அறிமுகப்படுத்திய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மக்கள் வேளாண்மை உயிரி தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளும் வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது. சிக்கலான மூலக் கூறு உயிரியல் மற்றும் மரபணு பொறியியல் குறித்து எளிமையாக தெரிந்துகொள்ள பயன்படும். இதில் அறிவியல் சார்ந்த, அறிவியல் சாராத மக்களும் புரிந்து கொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் பயன்படுத்தும் விதைகளால் விவசாயிகள் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைப்பதில்லை.
மேலும் அதிகளவில் பூச்சி மருந்து பயன்படுத்தப்படுவதால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு மரபணு மாற்றுப் பயிர்களே சரியான தீர்வாகும்.

ஆனால், மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசுக்கு சரியான புரிதல் இல்லாத நிலை உள்ளது. முன்பு 130 லட்சம் பேல் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், அவை உள்நாட்டு தேவைக்கே பற்றாக்குறையாக இருந்து வந்தது.

அதன்பின் பி.டி.ரக பயிர் பயிரிட தொடங்கியதையடுத்து தற்போது 350 லட்சம் பேல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டு தேவையான 250 லட்சம் பேல் போக மீதமுள்ள 100 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே பிற பயிர்களிலும் பி.டி.ரக பயிர்களை பயன்படுத்துவது மூலம் உற்பத்தியை அதகிரிக்க முடியும்.

இதில் நுண்ணுயிர் கலந்த பி.டி.ரக பயிர்களை பயன்படுத்தும் போது பூச்சிமருந்தின் பயன்பாட்டை குறைக்க முடியும். மேலும் மண் வலத்தை காப்பதுடன் விவசாயிகள் விளைச்சலையும் அதிகரிக்க முடியும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பலமுறை கூடியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

எனவே பி.டி.ரகபயிர்கள் தொடர்பாக உள்ள தவறான புரிதலை அகற்றுவதுடன், இவ்வகை விதைகள் பயன்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
Dailyhunt


http://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/marabanu+marrub+bayirkalai+bayirida+arasu+anumathikka+vendum+sa+sathasivam-newsid-63918477?ss=wsp&s=a

Related Posts: