விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்கு பட்ஜெட்டில் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், சிறு குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கூறியிருப்பதாவது:
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், விவசாயிகளுக்குக் கடன் வழங்க 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவிக்கும் இது போன்ற கடன்களை பெரிய வேளாண்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வேளாண் பொறியியல் சார்ந்த நிறுவனங்கள்தான் பெறுகின்றன. ஏழை சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை.
அரசு வங்கிகள் மற்றும் வேளாண் வங்கிகளில் அவர்களால் கடன் பெற முடியாமல் தனியாரிடம் கடன் வாங்குவதால்தான் தற்கொலைகள் அதிகரிக்கின்றன.
கடந்த ஆண்டு 15 மாநிலங்கள் வறட்சி, இந்த ஆண்டு 7 மாநிலங்களில் வறட்சி இந்தச் சூழ்நிலையில் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. வேளாண் விளை பொருள் கட்டுபடியான விலை நிர்ணயிப்பதற்குப் பதிலாக அதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார். அந்த ஆலோசனைகளால் பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை.
தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே செய்த பணிக்கே 10 ஆயிரம் கோடி ஊதிய பாக்கி உள்ளது. தமிழகத்திற்கு மட்டுமே 1000 கோடி பாக்கி உள்ளது. அதற்குத்தான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க ஒதுக்கப்படவில்லை.
பதிவு செய்த நாள் : February 01, 2017 - 03:09 PM