2017- 2018 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பெரிய அளவில் திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தேர்தல் அறிக்கை போல் உள்ளது என்றும் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருப்பதாகவும் திமுக எம்பி திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தொலைநோக்கு பார்வை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் முறைசாரா தொழிலாளர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வறட்சி நிலவும் நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் ஜிஎஸ்டி மூலம் பெரும் வரிச் சுமை மக்கள் மீது சுமத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் மாநிலங்களவை எம்பியுமான டி.கே. ரங்கராஜன் கூறியுள்ளார்.
இதே போல் ஏஐசிசிடியு தொழிற்சங்க மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.குமார் கூறுகையில், விவசாயத்தைப் பாதுகாக்க நீராதாரத்தை வலுப்படுத்தல், இடு பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு பொது முதலீடு ஒதுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதாகவும், அது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : February 01, 2017 - 04:49 PM