சென்னையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பின்னணியில் எண்ணூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை அடுத்த மூன்று மாதங்களுக்குச் சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று புதுடெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானியும் 'டெரி' (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தின் மூத்த இயக்குநருமான பன்வாரி லால் தெரிவித்தார். சென்னை எண்ணெய்க் கசிவு தொடர்பாக அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:
எண்ணூர் எண்ணெய்க் கசிவு கடல் வாழ் உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும். எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிடலாமா?
கடல் மீன்கள், கடல் ஆமைகள், கடல் பறவைகளை உள்ளிட்டவற்றை எண்ணெய்க் கசிவு மோசமாகப் பாதிக்கும். எண்ணெய்க் கசிவு காரணமாகக் கடல் வாழ் உயிரினங்களுக்கு உடல் வெப்பநிலை தாழ்வு (hypothermia) ஏற்படலாம். கடல் நீருடன் கச்சா எண்ணெய் கலப்பதால் எண்ணெய்ப்பசையுடன் காற்றுக்குமிழிகள் கலந்து நீரின் தன்மை (mousse) மாறிவிடும். இதனால் கடல் உயிரினங்களின் ரோமம், சிறகுகள் உடலோடு ஒட்டிக்கொள்ளும். இதன்காரணமாகவே உடல் வெப்பநிலைத் தாழ்வு ஏற்பட்டு, உடல் வெப்பநிலையைப் பராமரிக்க முடியாமல் கடல் உயிரினங்கள் மரித்துப்போகும்.
இது மட்டுமல்ல, கடல் வாழ் உயிரினங்கள் எண்ணெய் மாசை விழுங்குவதாலும் சுவாசிப்பதாலும் அல்சர், சிவப்பு ரத்த அணுக்கள் சிதைவு, சிறுநீரகம், கல்லீரல், நோய் தடுப்பாற்றல் போன்றவை பாதிக்கப்படலாம். அது மட்டுமல்லாமல் மீன்கள், கடல் ஆமைகளின் முட்டைகளையும் எண்ணெய்க் கசிவு மோசமாகப் பாதிக்கும்.
உணவுச் சங்கிலியில் இந்த எண்ணெய் மாசு நுழைந்து நம்மை வந்தடையும். இந்தப் பின்னணியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட கடல் பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்களுக்குச் சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பானது.
எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பணியை முடித்த பிறகும் எண்ணெய்ப் படலம் அவர்களுடைய உடலில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இதைத் தூய்மைப்படுத்தாவிட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த மாசை எப்படி அகற்றுவது?
எண்ணெய்ப் படலத்தைத் தூய்மைப்படுத்துபவர்களின் சிறப்பு உடை, கருவிகள் போன்றவற்றில் எண்ணெய் மாசு ஊடுருவி இருக்கும். வெளிப்படையாகத் தெரியும் மாசுபாட்டை கண்டறிந்து அகற்றுவது எளிது. ஆனால், அவர்கள் பயன்படுத்தும் பொருளிலோ, உடலிலோ ஊடுருவி இருக்கும் மாசுபாட்டைக் கண்டறிந்து அகற்றுவது கடினம். இவற்றில் தாழ்நிலை ஹைட்ரோகார்பன் மாசுபாட்டை தண்ணீர் விட்டே கழுவலாம்.
மற்ற நான்-போலார் மாசுபொருட்களை அகற்றுவதற்கு ஆல்கஹால், கீட்டோன், ஈதர், அரோமாட்டிக், ஆல்கேன், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தூய்மைப்படுத்தலாம். மாசுபாட்டை முறையாக அகற்றவில்லை என்றால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.
இவ்வளவு பெரிய எண்ணெய்க் கசிவைக் கையாளத் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவை (NDRF) அழைத்திருக்க வேண்டுமா?
இது போன்ற பேரிடர்களைக் கையாளத் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவை (NDRF) அழைத்திருக்கலாம். ஏனென்றால் நிலநடுக்கம், வெள்ளம், புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கைப் பேரழிவுகள், மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகளை அக்குழு சிறப்பாகக் கையாண்டிருக்கிறது. இருந்தபோதும், கடலில் எண்ணெய்க் கசிவைக் கடலோரக் காவல் படை ஏற்கெனவே கையாண்டிருக்கிறது என்பதால், அதை அழைத்திருக்கலாம்.
சரி இப்போது ஏராளமான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி அகற்றுவது? சேகரிக்கப்பட்ட எண்ணெயை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா?
எண்ணெய்க் கசிவை அகற்றுவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. எண்ணெய்க் கசிவு கடற்கரையை அடைந்துவிட்டால், அதை இயற்கையாகவே மக்கச் செய்ய முயற்சிக்கலாம். இயற்கையான நைட்ரஜன், பாஸ்பரஸை அவற்றின் மீது தூவுவதன் மூலம் நுண்ணுயிரியை வளரச் செய்து, அவற்றின் பரவலை ஓரளவுக்குத் தடுக்கலாம். சேகரிக்கப்பட்ட எண்ணெய் மக்குவதை விரைவுபடுத்துவதற்கு நுண்ணுயிர்களைப் பயன்படுத்தலாம்.
இதற்குத் தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (டெரி) அமைப்பு, மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை ஆதரவுடன் 'ஆயில்ஸாப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்துக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறது. அத்துடன் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இணைந்து நாடெங்கும் எண்ணெய்க் கசிவு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் அகற்றுவதற்குப் பணிபுரிந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் வயல்களில் ஏற்படும் மாசை அகற்ற இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் குவைத் எண்ணெய் வயல் ஒன்றில் 4 சதுரக் கி.மீ. பரப்பில் ஏற்பட்ட மாசு இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://tamil.thehindu.com/general/environment/3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9534483.ece