வியாழன், 16 பிப்ரவரி, 2017

எடப்பாடி பழனிச்சாமியின் பின்னணி

New cm

தமிழகத்தில் 13-ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவரது பின்னணி குறித்து தெரிந்து கொள்வோம்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்த போது ஜெயலலிதா அணியில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்றத்தில் நுழைந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
தற்போது ஜெயலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அணி பிரிந்துள்ள நிலையில், சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, தற்போது முதலமைச்சராகி இருக்கிறார்.
சேலம் மாவட்டம் சிறுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றியவர். எம்ஜிஆர் மறைவிற்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
1991 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் தனது சொந்தத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் கட்சியில் குழப்பம் ஏற்பட்ட சூழலில் சசிகலாவை முதலமைச்சராக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது முதலமைச்சராகியிருக்கிறார்.

Related Posts: