வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

‛இந்த பட்ஜெட் ஏன் பழைய பஞ்சாங்கம்..?’ - நிபுணர்கள் கருத்து

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒரு வழியாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து, ஒரு சிலர் 'பெரிய அளவில் குறை ஒன்றும் சொல்ல முடியாத பட்ஜெட்; உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு; விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு; வாவ்... சூப்பர் பட்ஜெட்' என்கின்றனர். ஆனால், 'பட்ஜெட் அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை. இது வழக்கமான பட்ஜெட். இது மாபெரும் வரலாற்றுப் பிழை' என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 
பட்ஜெட், பட்ஜெட் 2017
பொருளாதார நிபுணர் நாகநாதன்: 
இது ஒரு வழக்கமான நிதி நிலை அறிக்கை. புதிதாகப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. எப்போதுமே சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்ட செலவினங்கள் முழுமையாகச் செலவிடப்பட்டதா என்பதைப் பற்றிய குறிப்பு அறிந்து பேசுகிற வாய்ப்பு பலருக்கு கிடைக்காது. ஆனால், சென்ற ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதியைக் குறைத்தார்கள். அதேமாதிரி குழந்தை ஊட்டச் சத்து திட்டத்திற்கான நிதியைக் குறைப்பது, அதிகரிப்பது என்பது அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட நிதியை வைத்து விளையாடும் விளையாட்டாகவே தெரிகிறது.
ஆகையால், இந்த பட்ஜெட் ஒரு புள்ளிவிவர பட்ஜெட் ஆகத்தான் இருக்கிறது. பட்ஜெட்டில், பண மதிப்பு நீக்கத்தினையடுத்து அதனால் வருமான வரி உயர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்தவித ஆதாரமும் வழங்கவில்லை. பட்ஜெட்டில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் பல இருக்கின்றன. ரயில்வே பட்ஜெட்டை இந்த நிதி நிலை அறிக்கையுடன் இணைத்தது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழை. ஏனெனில் மீண்டும் மீண்டும் உச்ச நிலை அதிகார குவிப்பே டில்லியில் நடைபெறுகிறது. உலகத்திலேயே, இந்திய ரயில்வேக்கு அதிக சொத்துக்கள் இருக்கின்றன.
சொத்துகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. இப்போது துறைமுகங்கள் மத்திய அரசின் யூனியன் பட்டியலில் இருக்கிறது. அதை இப்போது தனியார் துறைக்குத் தாரைவாக்கப்பட்டது. அதுவும் ஒரு போக்குவரத்துறைதானே. அதேபோன்று நாளை ரயில்வேயையும் தாரை வார்க்க வாய்ப்பிருக்கிறது. பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் இணைத்தது பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பயன்படும். 
நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்: 
பட்ஜெட் எப்படி வரும், என்னவாகும் என்று ஒரு பதட்டமான நிலையே இருந்தது. ஏனெனில் பட்ஜெட்டில் பங்குச் சந்தையில் குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி உயர்த்தப்படும் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. பட்ஜெட்டில் ரயில்வேக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் ரூ.12,500 வரை சேமிக்க முடியும். 80Cன் கீழ் வரி விலக்கை முழுவதுமாக பயன்படுத்தினால் வரி எதுவும் கட்டத்தேவையில்லை. 
பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்: 
பழைய பட்ஜெட்டுக்கும், இந்த பட்ஜெட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. வருமான வரி விலக்கில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசின் பொதுச் செலவுகள் குறைந்து காணப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் மதிப்பீடு நம்பும்படி இல்லை. வரி வருவாய் 12 லட்சம் கோடி ரூபாய் வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவில் நடைமுறைக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1% என்றளவில் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
பண மதிப்பு நீக்கத்தினையடுத்து அதன் பாதிப்பு முழுமையாகச் சொல்லப்படவில்லை. இதுபோன்ற நிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் மேலும் குறையும். இப்படி குறையும் போது வரி வருவாய் கிடைக்காது. வரி வருவாய் கிடைக்கவில்லை எனில் செலவினங்களே செய்ய முடியாது. அதுமட்டும் இல்லாமல் நிதிப் பற்றாக்குறை 3.2% என்பது இன்னும் அதிகமாகும். உள்கட்டமைப்பு, போக்குவரத்து என்று செலவினங்கள் சொல்லப்பட்டுள்ளது, நம்பகத்தன்மையாக இல்லை. 
நிதி ஆலோசகர் கா.முகைதீன் மாலிக்: 
இந்த பட்ஜெட் பொறுத்தவரை பாசிட்டிவ் ஆன விஷயம், அசையா சொத்துகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி 3 வருடத்திலிருந்து 2 வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு 8% உறுதியான பென்சன் வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி பாசிட்டிவ் ஆன விஷயங்கள் எதுவும் இல்லை. நெகட்டிவ் ஆன விஷயங்கள் அல்லது ஏமாற்றம் அளிக்கும் விஷயங்களே பெரும்பாலும் உள்ளது. ஏனெனில் பொதுவாக ஒட்டுமொத்த மக்களும் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அது உயர்த்தப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
80C-ன் கீழ் வரி விலக்கு ஒன்றரை லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பும் வீணாகிப்போனது. வீட்டுக் கடனுக்கான விதிவிலக்கு 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுபோல் எதிர்பார்க்கப்பட்ட எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை மீண்டும் மீண்டும் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற உணர்வை மட்டுமே தருகிறது. 

http://www.vikatan.com/news/india/79543-economists-say-the-union-budget-is-a-great-historical-error.art

Related Posts: