அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க, 130 எம்எல்ஏ-க்கள் வரை ஆதரவு இருப்பதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர். சசிகலாவை எதிர்த்து, போர்க்கொடி தூக்கியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வமும் உரிய நேரத்தில் எம்எல்ஏ-க்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், தனது பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பன்னீர் செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சசிகலாவிற்கு முதலமைச்சராக ஆளுநர் பதவி பிராமணம் செய்து வைக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் உள்ள சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வர இருப்பதால், அதன்பின்னர் சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன் என ஆளுநர் கூறவும் வாய்ப்பு உள்ளது என அதிகாரபூர்வமற்ற தகவலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, கட்டாயப்படுத்தி தன்னிடம் ராஜினாமா பெறப்பட்டதாக முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு முடிவையும் ஆளுநர் எடுக்கலாம்.தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், முதலமைச்சர் பன்னீர் செல்வத்தையும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும் சட்டப்பேரவையை கூட்டி தங்களது, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறவும் வாய்ப்புள்ளது.
இதேபோன்ற ஒரு நிலைமை உத்தரப்பிரதேசத்தில் நடந்தது. கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கல்யாண் சிங் அரசை அம்மாநில ஆளுநர் ரோமேஷ் பன்டாரி கலைத்தார். சில மணி நேரத்திலேயே ஜெகதாம்பிகா பாலை முதல்வராக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனை எதிர்த்து கல்யாண் சிங் அவசர மனு ஒன்றினை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு வழங்காமல் மற்றொருவரை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தது ஏற்புடையதல்ல என்று அவர் கூறியிருந்தார். இதனையடுத்து கல்யாண்சிங்கிற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஜெகதாம்பிகா பால் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது, உச்சநீதிமன்றம், இருவரையும் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போடலாம் எனவும், இவர்கள் இருவரில் யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களது தலைமையில் அமைச்சரவை அமையும் என கூறியது.
இதனையடுத்து கூடிய சட்டமன்ற கூட்டத்தில் கல்யாண் சிங்கிற்கு 225 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல், ஜெகதாம்பிகா பாலுக்கு 195 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து கல்யாண் சிங் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் யார் முதலமைச்சர் என தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அர்ஜூன் முன்டாவிற்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சிபு ஷோரனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டபோதும் இருவரும் முதல்வர் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதேபோல, தமிழகத்திலும் ஆளுநர் முடிவெடுக்கலாம்.
- இராமானுஜம்
February 09, 2017 - 03:51 PM
http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/tamilnadu/112/79609/who-will-be-the-cm-what-will-be-tn-governors-move