10 4 23
வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சியினரின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக ஆக இருக்க ஆளுநர் தயாராக இல்லை என கூறினார்.
இதையும் படியுங்கள் : ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது!
மதச்சார்பின்மைக்கு எதிராக பேசும் ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் எனக்கூறிய அவர், தினமும் ஒரு கூட்டம் என்ற நிலையில் ராஜ்பவனை, அரசியல் பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.
மேலும், வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநரின் செயல்பாடுகளை மட்டுமே அரசு விமர்சித்து வருவதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அதே நேரத்தில், அரசியல் நோக்கத்தோடு சட்டமன்றத்துக்கு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என தெரிவித்தார்.ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம் என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், அரசியல் நோக்கத்துக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக இந்த அவையில் சட்டங்களை நாம் நிறைவேற்றுவது இல்லை என்றும், சட்டத்தை தன்னுடைய சுய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு காரணம் சொன்னால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல என்றும் கூறினார்.
source https://news7tamil.live/the-governor-is-the-mouthpiece-of-the-communal-minded-chief-minister-m-k-stalins-heavy-attack.html