21 4 23
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று தனித் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு துறைகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
இதையும் படியுங்கள் : சட்டப்பேரவையில் முதல் முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்!!
தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான் விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததற்கு ஏற்ப, இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று முக்கிய தனித் தீர்மானங்களை கொண்டுவந்துள்ளார்.
1. சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
2. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய குடியரசுத் தலைவர், பிரதமரை வலியுறுத்தி அரசினர் தீர்மானம் கொண்டு வந்தார்.
3. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் அரசினர் தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
source https://news7tamil.live/resolutions-brought-by-the-chief-minister-in-the-current-assembly-session.html