வெள்ளி, 21 ஏப்ரல், 2023

சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்

 21 4 23

திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அரசு கொண்டு வந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோழமைக் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளும், பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, 12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போகச் செய்யும் சட்ட மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்தார்.  இதேபோல, இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார்.

மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப்பெருந்தகை, இந்த சட்ட மசோதாவால் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்றும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார். இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை என்றும், தற்பொழுது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு, மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டு வரப்படவில்லை என்றும், விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சாலைகள் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுவது, தமிழ்நாடு அரசு கொண்டுவரவில்லை என்றார். 12 மணி நேரம் வேலை என்பது யார் வேண்டுமோ அவர்கள்தான் இதை பயன்படுத்தலாம். எல்லோருக்கும் அல்ல. அவர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்று தெரிவித்து வேலை செய்து வார விடுப்பு 3 நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தால் மட்டுமே 12 மணி நேர வேலை அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.

source https://news7tamil.live/for-the-first-time-in-the-legislative-assembly-the-coalition-parties-walked-out-against-the-government.html