சனி, 29 ஏப்ரல், 2023

கணித அறிவியல் படிப்புக்குச் சென்னைக் கணித நிறுவனத்தில் விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

 கணித அறிவியல் படிப்புக்குச் சென்னைக் கணித நிறுவனத்தில் விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

பள்ளிப்படிப்பில் கணிதம் பாடம் பலருக்கும் கசந்தாலும், நூற்றுக்கு நூறு முழுமையான மதிப்பெண்கள் பெறக்கூடிய ஒரே பாடம் கணிதம் என்பதால், அதற்கான சிறப்புப் பயிற்சிகள் பெற்று, பின்னர் அந்தப் பாடத்தில் தனி ஆர்வம் கொண்டு, கல்லூரிகளில் கணிதத்தையே முதன்மைப் பாடமாகப் படிக்க வேண்டும் என்றும் விரும்பும் பலர் இருக்கின்றனர். அவர்கள் விருப்பத்திற்கேற்ற வகையில், கணித அறிவியல் தொடர்புடைய பாடங்களை மட்டும் முதன்மைப் பாடங்களாகக் கொண்டு, சென்னையிலுள்ள 'சென்னைக் கணித நிறுவனம்' செயல்பட்டு வருகிறது.
நிறுவனம்
சென்னைக் கணித நிறுவனம் (Chennai Mathematical Institute) என்பது ஸ்பிக் அறிவியல் அறக்கட்டளையால் (SPIC Science Foundation) 1989 ஆண்டில் அறிவியல் கற்பித்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்ட சிறப்புப் பணிகளுக்காகச் சென்னையில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 1996-ம் ஆண்டில் தன்னாட்சிக் கல்வி நிறுவனமாகத் தரம் உயர்த்தப்பட்டு, அதன் பின்னர் 2006-ம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் எனும் கூடுதல் தகுதியையும் பெற்றிருக்கிறது.
படிப்புகள்
இந்நிறுவனத்தில் மூன்று வருட கால அளவிலான படிப்புகளாக,
கணிதம் மற்றும் கணினி அறிவியல் (Mathematics and Computer Science),
கணிதம் மற்றும் இயற்பியல் (Mathematics and Physics)
எனும் இரண்டு பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் (நன்மதிப்பு) (B.Sc. (Hons.)) பட்டப்படிப்புகளும்,
இரண்டு வருட கால அளவிலான
கணிதம் (Mathematics),
கணினி அறிவியல் (Computer Science),
தரவு அறிவியல் (Data Science)
எனும் மூன்று பாடப்பிரிவுகளில் முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்புகளும்,
கணிதம் (Mathematics),
கணினி அறிவியல் (Computer Science),
இயற்பியல் (Physics)
எனும் மூன்று பாடப்பிரிவுகளிலான முனைவர் (Ph.D) பட்டத்திற்கான ஆய்வுப் படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
கல்வித்தகுதி
இளநிலை அறிவியல் (நன்மதிப்பு) (B.Sc. (Hons.)) பாடப்பிரிவுகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான வகுப்பில் கணிதப் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்புகளில் கணிதம், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலை, அறிவியல், கணிதம், புள்ளியியல், பொறியியல் அல்லது தொழில்நுட்பம் (BA / B.Sc / B.Math / B.Stat / B.E / B. Tech) கொண்ட பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதப்பிரிவிற்குக் கணிதப் பாடத்திலும், கணினி அறிவியல் பிரிவிற்குக் கணினி அறிவியல் பாடத்திலும், தரவு அறிவியல் பிரிவிற்கு கணிதம் / புள்ளியியல் / கணினி அறிவியல் பாடங்களில் பலமான பின்புலம் இருக்க வேண்டும்.
ஆய்வுப் படிப்புகளில் கணிதம் பாடப்பிரிவிலான முனைவர் (Ph.D) பட்டத்திற்கு கணிதம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) அல்லது அதற்கு இணையான படிப்புகள், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.E / B.Tech) பெற்றிருக்க வேண்டும். கணிதப் பாடத்தில் ஆய்வுக்கான சிறப்புத் தகுதியுடைய இளநிலை அறிவியல் பட்டம் (B.Sc) பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
கணினி அறிவியல் பாடப்பிரிவிலான முனைவர் (Ph.D) பட்டத்திற்குப் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.E / B.Tech), அறிவியல் அல்லது கணினிப் பயன்பாட்டியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc / M.C.A) பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் ஆய்வுக்கான சிறப்புத் தகுதியுடைய இளநிலை அறிவியல் பட்டம் (B.Sc) பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
இயற்பியல் பாடப்பிரிவிலான முனைவர் (Ph.D) பட்டத்திற்கு இயற்பியல் பாடத்தில் முதுநிலை அறிவியல் பட்டம் (M.Sc) அல்லது இயற்பியல், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.Sc (Physics) / B.E / B.Tech) பெற்று ஆய்வுக்கான சிறப்புத் தகுதியுடையவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
மாணவர் சேர்க்கை
இங்கு இடம் பெற்றிருக்கும் தகவல் கையேட்டை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு இணைய வழியில் (Online) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை (நன்மதிப்பு) படிப்புகளுக்கு ரூ750/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்புகள் (M.Sc / Ph.D) நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்புகளில் ஏதாவதொன்றுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ 750/-, ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு ரூ. 900/- என்று இணைய வழியில் செலுத்திட வேண்டும். வங்கி வரைவோலையாகச் செலுத்த விரும்புபவர்கள் “Chennai Mathematical Institute” எனும் பெயரில் சென்னையில் மாற்றிக் கொள்ளத்தக்கதாக உரிய கட்டணத்தை வரைவோலையாகப் பெற்று அனுப்பி வைக்க முடியும்.
நுழைவுத் தேர்வு
மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்கும் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உட்பட இந்தியா முழுவதும் 37 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது.
ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (HBSCE) நடத்திய கணிதம், இயற்பியல் பாடங்களுக்கான ஒலிம்பியாட் தேர்வுகளிலும், இந்திய கணினி அறிவியல் ஆய்வுக் கழகம் (IARCS) நடத்திய கணினி அறிவியல் ஒலிம்பியாட் தேர்விலும் குறிப்பிடத்தக்க சில தகுதிகளைப் பெற்றவர்கள் (முழுமையான தகவல்களுக்குத் தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்) இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு (B.Sc.,) நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.
முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகளில் கணிதப் பிரிவிற்கு உயர் கணிதத் தேசிய வாரியம் (NBHM) ஆய்வு உதவித்தொகைத் தகுதி பெற்றவர்களும், கணிதம், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகளுக்கு இணை நுழைவுத் தேர்வில் (Joint Entrance Screening Test (JEST) தகுதி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். இவர்கள் சென்னைக் கணித நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வினை எழுத வேண்டியதில்லை. இவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்குப் பதிலாகத் மேற்காணும் தகுதித்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
மாணவர் சேர்க்கை
நுழைவுத்தேர்வுக்குப் பின்னர், இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், கல்வித்தகுதிக்கான படிப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு தகுதிப்பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நடத்தி மாணவர் சேர்க்கை முடிவு செய்யப்படும். முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்புகளுக்குச் சென்னையில் நேர்காணல் நடத்தப்பெற்று மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும்.
விடுதிக் கட்டணம்
இந்நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படிப்புகளுக்கும் சேர்க்கை பெறும் மாணவர்கள் அனைவரும் இந்நிறுவன வளாகத்திலுள்ள விடுதிகளில் மட்டுமேத் தங்கிப் படிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் போதும், ஆறு மாத கால அளவிலான ஒவ்வொரு பருவத் தொடக்கத்தின் போதும், விடுதிக் கட்டணம் ரூ. 4000/- உணவுக் கட்டணம் ரூ.18,000/- மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 3000/- என்று ஒரு பருவத்திற்கு ரூ.25,000/- செலுத்த வேண்டியிருக்கும்.
பயிற்சிக் கட்டணம் மற்றும் உதவித்தொகை
இந்நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பயிற்சிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு முழுப்பயிற்சிக் கட்டணம் தள்ளுபடி அல்லது மாதம் ரூ. 5000/- உதவித்தொகையாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது வழங்கப்படும் உதவித்தொகையின் எண்ணிக்கை ஆண்டுக்கு 35 எனும் அளவாக இருக்கிறது. இதே போன்று, முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு முழுப்பயிற்சிக் கட்டணம் தள்ளுபடி அல்லது மாதம் ரூ. 6000/- உதவித்தொகையும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
தற்போதைய நடைமுறையிலுள்ள அளவுகோல்களின் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கையின் போது உதவித்தொகை வழங்கும் முடிவுகள் எடுக்கப்படும். வழங்கப்படும் உதவித்தொகையின் தொடர்ச்சியானது, ஒவ்வொரு பருவத் தேர்வுகளின் முடிவுகளுக்குப் பின்பும் மாணவர்களின் கல்வி செயல்திறனைக் கொண்டு மதிப்பாய்வு செய்யப்படும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு உயர்கல்வி
சென்னைக் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர்ந்து, பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கின்றனர். அமெரிக்காவில் கால்டெக், சிகாகோ, ஜான்ஸ் ஹாப்கின்ஸ், எம்ஐடி, பிரின்ஸ்டன், ரட்ஜர்ஸ் மற்றும் யேல், எக்கோல் நார்மல் சுப்பீரியர், ஈகோல் பாலிடெக்னிக், பாரிஸ் சுட் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சில் உள்ள போர்டியாக்ஸ் பல்கலைக்கழகம், ஜெர்மனியில் சர்ப்ரூக்கென் மற்றும் பான் ஆகிய இடங்களில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனங்கள், சூரிச்சில் ETH ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கவை. இதே போன்று, இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களான சி.எம்.ஐ, ஐ.எம்.எஸ்.சி, எச்.ஆர்.ஐ, டி.ஐ.எஃப்.ஆர், ஐ.ஐ.டிக்கள், மற்றும் ஐஎஸ்ஐ போன்றவைகளிலும் அதிக அளவில் உயர்கல்வி சேர்க்கையினைப் பெற்றிருக்கின்றனர்.
கூடுதல் தகவல்கள்
இந்தக் கல்வி நிறுவனம் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்நிறுவனத்தின் http://www.cmi.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது “Chennai Mathematical Institute, H1, SIPCOT IT Park, Siruseri, Kelambakkam 603103, Tamilnadu” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது (044) 6748 0900, (044) 2747 0226 / 0229, (044) 3298 3441 / 3442 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது admissions@cmi.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
May be an image of text that says 'LATEST NEWS TNTJ Students Ving Chennai Mathematical Institute! சென்னையில் கல்வி உதவித் தொகையுடன் கணிதம் பயில உலகத்தரம் வாய்ந்த கல்வி TNTJ Students Wing நிறுவனம்! visit us www.tntjsw.net tntjswfo f tntjsw 14/02/2023'