வெள்ளி, 21 ஏப்ரல், 2023

பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம்

 21 4 23

Army vehicle
Army vehicle

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் நேற்று (ஏப்ரல் 20) பிற்பகல் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர், அங்கு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் மழை மற்றும் வெளிச்சத்தை சாதகமாகி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியதால் வாகனம் தீப்பிடித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. ரஜோரி செக்டாரில் பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் சங்கியோடி பகுதிக்கு மாலை 3 மணியளவில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் மரணமடைந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த வீரர் உடனடியாக ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹவ் மன்தீப் சிங், எல்/என்கே குல்வந்த் சிங், செப் ஹர்கிரிஷன் சிங், செப் சேவக் சிங் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த எல்/என்கே தேபாஷிஷ் பஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் எல்.ஓ.சி பகுதியே அருகே நடந்த இந்த சம்பவம் பயங்கரவாதிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் முதலில் விபத்தாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் பின்னர் அது பயங்கரவாதிகள் தாக்குதல் தான் காரணம் என்று ராணுவம் உறுதி செய்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அக்டோபர் 2021-ல் பாடா துரியன் மற்றும் சாம்ரல் காடுகளில் பயங்கரவாதிகள் 9 வீரர்களை கொன்றனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கிட்டதிட்ட 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/five-soldiers-killed-in-jk-terror-attack-army-says-firing-likely-use-of-grenades-645604/