கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் தரப்பட்ட நிலையில், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. திட்டமிடல், கண்காணிப்பு குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகள் கட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீன்) ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2021 வரையிலான செயல்பாடு குறித்து சி.ஏ.ஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 21) அறிக்கை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், “2016 முதல் 2021 வரை 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசு மானியம் பெறாதது, நிர்வாக நிதியின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாத செலவுகள், தகுதியற்ற பயனாளிகளை சேர்த்தல், தகுதி உள்ள பயனாளிகளை சேர்க்காமை, வீடுகளின் ஒப்பளிப்பில் முறைகேடுகள், கண்காணிப்பில் பற்றாக்குறை உள்ளிட்டவை முக்கிய குறைபாடுகள் ஆகும்.
நிர்ணயம் செய்யப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால் மத்திய அரசின் ரூ.1,515.60 கோடி நிதியை உரிய நேரத்தில் தமிழக அரசால் பெற முடியவில்லை. ஊரக வளர்ச்சி இயக்குனர், ஒதுக்கப்பட்ட நிர்வாக நிதியில் இருந்து விளம்பரங்கள் மற்றும் திட்டத்திற்கு தொடர்பு இல்லாத பிற செயல்பாடுகளுக்கு ரூ.2.18 கோடி ஏற்றுக் கொள்ள முடியாத செலவினம் செய்து உள்ளார்.
திட்டமிடலில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் கவனக்குறைவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு அளிக்க நிர்ணயம் செய்யப்பட்ட 60 சதவீத வீடுகள் என்ற இலக்கை அடைய முடியவில்லை. குறைபாடுகளின் விளைவாக, இறுதி நிரந்திர காத்திருப்பு பட்டியலில் (Permanent Wait List – PWL) போதுமான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்கள் சேர்க்கப்படாமல் போனது. கணிசமான எண்ணிக்கையிலான எஸ்.சி,எஸ்.டி குடும்பங்கள் சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு (Socio Economic and Caste Census – SECC) தரவுகளில் இருந்து நீக்கப்பட்டன.
சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தரவின் இந்த குறைபாட்டை தவறாக பயன்படுத்தி கணிசமான எண்ணிக்கையிலான வீடுகள் முறைகேடாக அனுமதிக்கப்பட்டன.
மாதிரித் தொகுதிகளில், சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தரவின் பெயர் புலத்தில், தெரியாது என்ற உள்ளீட்டை தவறாக பயன்படுத்துவது மூலம் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.50.28 கோடி முறைகேடான செலவு ஏற்பட்டது. மாநில அளவில் ஆய்வு மேற்கொண்டால் முறைகேடாக அனுதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cag-reports-point-to-violations-graft-under-aiadmk-regime-646645/