23 4 23
Mahender Singh Manral , Mihir Vasavda
பா.ஜ.க எம்.பி.,யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 பெண் மல்யுத்த வீரர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புது தில்லியில் உள்ள கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதன் தலைவர் ஸ்வாதி மாலிவால், “குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக ஒரு மைனர் உட்பட பல பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்,” என்று கூறியுள்ளார். மேலும் துணை போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், பிரிஜ் பூஷண் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்வாதி மாலிவால் கோரியுள்ளார்.
பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மல்யுத்த வீரர்கள் அவருக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் உள்ளிருப்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளனர்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ANI இடம், “ஆம், கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று உறுதிப்படுத்தினார்.
மற்றொரு மல்யுத்த வீரர், “எங்கள் எதிர்ப்பை விளையாட்டு அமைச்சகத்திடம் தெரிவித்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்,” என்று கூறினார். “காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்றும் அந்த வீரர் கூறினார்.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, தங்களுக்கு புகார் கிடைத்ததை உறுதிசெய்ததுடன், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். “நாங்கள் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் பெற்றுள்ளோம், எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு விசாரணை நடத்தி வருகிறோம். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஜ்ரங் பூனியா, வினேஷ் போகட் மற்றும் பல முன்னணி மல்யுத்த வீரர்கள், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் கண்டுபிடிப்புகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மல்யுத்த வீரர்களால் பிரிஜ் பூஷண் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனவரி 23 ஆம் தேதி அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக குத்துச்சண்டை ஜாம்பவான் எம்.சி மேரி கோம் உள்ளார். குழுவுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது, ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதன் கண்டுபிடிப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
மேரி கோம் தவிர, ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனையும், மிஷன் ஒலிம்பிக் செல் உறுப்பினருமான த்ருப்தி முர்குண்டே, டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் மேற்பார்வைக் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், மல்யுத்த வீரர்கள் WFI தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வினேஷ் போகட் கூறியிருந்தார். இம்மாத தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வினேஷ் போகட் கூறுகையில், “கமிட்டி மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். “நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து சில உறுதிமொழிகளைப் பெற்றோம் ஆனால் அவையும் நிறைவேற்றப்படவில்லை. அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் நிலை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/sports/ipl/wrestlers-police-complaint-brij-bhushan-sharan-singh-sexual-harassment-648194/