வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தினமும் 12 மணி நேரம் வேலை; வாரத்தில் 3 நாள் விடுமுறை: தமிழக அரசு புதிய சட்டம்; இடதுசாரிகள் எதிர்ப்பு

 21 4 23 

தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற தொழிற்சாலை சட்டதிருத்த மசோதா கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பொதுவாக 8 மணி நேரம் வேலை வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் தினமும் 12 மணி நேரம் வேலை வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என்று சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்த நிலையில், இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனாலும் அரசின் சார்பில் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன்படி இன்று சட்டசபையில் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி இனி தனியார் நிறுவனங்களில் தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் 3 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த சட்டமசோதாவுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளாக மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பலமான எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனாலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டுக்காக தமிழகத்திற்கு வர தொடங்கியுள்ளன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்டக்குழ அமைக்கப்படும். அதே சமயம் எந்த தொழிலாளர் விரும்புகிறார்களே அவர்களுக்கு மட்டும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கனேசன் பேசுகையில், தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்டால் அடுத்து 5-வது நாள் அவர்கள் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் சட்டம் உள்ளது. அதே சமயம் விருப்பம் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-passed-12-hours-working-bill-despite-opposition-from-opposition-parties-646149/