வியாழன், 27 ஏப்ரல், 2023

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 26 4 23 

Coimbatore
Coimbatore

கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி அருகில் கூலி கடவு என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணையை கட்டி வருகிறது. 90% பணிகள் முடிந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு அணைகள் கட்ட கேரள அரசு ஆயத்தமாகி வருகிறது. இந்த அணை கட்டுவதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று (ஏப்ரல் 26) ஈடுபட்டனர்.

தடுப்பணையை அகற்ற கோரியும், சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரளா அரசை கண்டித்தும் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம், வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழக அரசு இந்த தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கேரளா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க கேரளா அரசு அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

செய்தி: பி.ரஹ்மான். கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-political-parties-stage-protest-condemning-kerala-government-651206/

Related Posts: