திங்கள், 8 ஜனவரி, 2024

குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை': பில்கிஸ் பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

 Supreme Court  | Bilkis Bano case: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மதவாத வன்முறைகளில், பில்கிஸ் பானு விவகாரம் முக்கியமானது. 5 மாத கர்ப்பிணியாக இருந்த இளம்பென் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உள்ளூர் கும்பல், சிறு குழந்தையான அவரின் மகள் உட்பட குடும்பத்தினரையும் கொடூரமான முறையில் படுகொலை செய்தது. 

காலத்தால் அழிக்கமுடியாத வடுவாகிப் போன அந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, அவர்களை குஜராத் அரசு ஆகஸ்ட் 15, 2022 அன்று முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பில்கிஸ் பானு கடந்த மாதம் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு குஜராத் மாநில அரசை கடுமையாக சாடினார்கள். அம்மாநில அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையை சரமாரியாக கேள்விகளை எழுப்பியனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின், எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? இதுபோன்ற சலுகைகள் மற்ற கைதிகளுக்கு பொருந்தாதா? முன் கூட்டியே விடுதலை என்ற சலுகைக்கு, இவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 

இந்த வழக்கில் விசாரணை 11 நாட்கள் நடைபெற்ற நிலையில்  கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதேவேளையில், 11 குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்தது தொடர்பான விவரங்களை அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய மற்றும் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பு 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகியுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், வழக்கு  மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

"உச்ச நீதிமன்றத்தில் 2022-ல் மோசடியாக உத்தரவு பெறப்பட்டுவிட்டது. பில்கிஸ் பானு வழக்கில், 2022 மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே தவறானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது" என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, முன்கூட்டியே விடுதலை செய்யவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட ஜஸ்வந்த் நாய், கோவிந்த் நாய், ஷைலேஷ் பட், ராதியேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜுபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 குற்றவாளிகளும் சிறைக்கு திரும்ப உள்ளனர். 


source https://tamil.indianexpress.com/india/supreme-court-overrules-decision-to-grant-remission-to-11-convicts-in-bilkis-bano-case-tamil-news-2322443

Related Posts: