ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று மாநில போக்குவரத்து ஆணையர் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அழைக்கும் நாளில் நேரில் சென்று வாகனத்தை ஓட்டிக்காட்டினால் ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும். அண்மையில், ஓட்டுநர் உரிமம் அனைவருக்கும் இனி அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று மாநில போக்குவரத்து ஆணையர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையர் அறிவித்திருப்பதாவது: “இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (எல்.எல்.ஆர் - LLR) விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்களில் ரூ. 60 கட்டணம் செலுத்தி ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தொடர்ந்து அனைத்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் இ-சேவை மையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அறிவித்துள்ளார்.
ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று மாநில போக்குவரத்து ஆணையர் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/state-transport-commissioner-notification-people-can-apply-for-llr-at-e-service-centers-4328391