புதன், 3 ஜூலை, 2024

தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

 

தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 65 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை அடுத்து, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் தீவிரமாக எழுந்துள்ளன.

ஆனாலும், தற்போது மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய சூழல் எழவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அதே சமயம் தமிழ்நாட்டை தாண்டி நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்கிற மிக முக்கியமான கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் முன்வைத்தார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பேசிய திருமாவளவன்

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பை கலைக்க வேண்டும். நீட் தேர்வை தேசிய அளவில் முழுமையாக நீக்க வேண்டும். நீட் விலக்கு கேட்டு இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு சட்டமன்றம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுவரை அதுகுறித்து பொருட்படுத்தவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் செயல் இது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ல் நாடு முழுவதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, மது ஒழிப்பை பொருட்படுத்தவில்லை. இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி நான் வேதனை அடைகிறேன்.

மத்திய அரசுக்கு அந்த வேதனை இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். போதைப் பொருள் என்பது குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் இல்லை. இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன, கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

அப்போது எழுந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பை, மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை வரவேற்கிறேன். அதே சமயம் திருமாவளவன் கூட்டணியில் உள்ள திமுக ஆளும் தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை அருந்தி 56 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உங்கள் அறிவுரைகளை முதலில் தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கு திமுக, விசிக உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.


source https://news7tamil.live/alcohol-prohibition-should-be-implemented-at-the-national-level-vishika-leader-thirumavalavan.html