மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து நேற்று (ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது இந்து, நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) மக்களவையில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.
அப்போது மோடி பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டுனர். தொடர்ந்து, அமளிக்கு இடையே பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி 2 மணி நேரத்திற்கு மேல் பேசினார். பிரதமர் மோடி பேசி முடிக்கும்வரை எதிர்க்கட்சியினர் அமைதி காக்காமல் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை அவைத் தலைவர் ஓம் பிர்லா கடுமையாக கண்டித்தார். இருப்பினும், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிப்பூருக்கு நீதி வேண்டுமென்றும் முழக்கமிட்டும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பிரதமரின் உரைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவையை தேதி குறிப்பிடாமல், அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
TWO FACES 🎭 PIC.TWITTER.COM/SYQIU3MZCT
— CONGRESS (@INCINDIA) JULY 2, 2024
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “சபாநாயகர் ஓம் பிர்லாவின் இரண்டு முகங்கள்” என புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/one-speaker-two-faces-congress-review.html