திங்கள், 10 நவம்பர், 2025

வரி வசூல் கெடுபிடி... அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தம் ஏன்?

 9 11 2025


omni bus

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநிலங்களின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளைத் தொடங்கியுள்ளதால், தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தனியார் பேருந்து சேவைகள் வழங்குவதில் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆம்னி பஸ் சங்கங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், "இந்த மாநிலங்களுக்கிடையே சேவைகளை இயக்க முடியாத ஒரு நிலைக்கு பேருந்து உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு, அண்டை மாநிலங்களுடன் பேசி இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி, கேரளா அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட தமிழகப் பேருந்துகளைச் சோதனையிட்டனர். அதில், 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளைப் பிடித்து, ரூ 70 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் விதித்தனர். அதேபோல், கர்நாடக அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்தில் தமிழகப் பதிவு எண்களைக் கொண்ட 60-க்கும் மேற்பட்ட பேருந்துகளை மறித்து, ஒரு வாகனத்துக்கு ரூ2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளனர்.

2021-ல் அகில இந்திய சுற்றுலா அனுமதி (AITP) அறிமுகம் செய்யப்படுத்தப்பட்டபோதிலும், தமிழ்நாடு தொடர்ந்து தங்கள் பேருந்துகளுக்குச் சாலை வரி விதிப்பதாக, கேரளாவும் கர்நாடகாவும் கூறி வருகின்றன. இதன் காரணமாகவே இந்த பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் அபராதங்களும், ஒன்றுடன் ஒன்று மேற்படி வரும் வரிகளும் தங்கள் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகப் பேருந்து உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

நவம்பர் 7ஆம் தேதி இரவு 8 மணி முதல், கேரளாவுக்குச் செல்ல வேண்டிய 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், வழக்கமான பயணிகளும், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரு மாநிலங்களுக்கிடையேயான பேருந்துக்கு, பல மாநிலங்களில் சேர்த்து காலாண்டு வரி மட்டும் கிட்டத்தட்ட ரூ4.5 லட்சம் வரை செலவாகிறது" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-omini-bus-association-disrupted-to-inter-state-service-10642768