செவ்வாய், 11 நவம்பர், 2025

புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி குறைய வாய்ப்பு

 

'Coming Of (a Turbulent) Age: The Great Global Gold Rush' என்ற தலைப்பிலான எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை (SBI Research) படி, 2025 ஆம் ஆண்டில் ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒடிசா: தியோகர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 1,685 கிலோ தங்கத் தாது இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) கண்டறிந்துள்ளது.

மத்தியப் பிரதேசம்: ஜபல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் பல லட்சம் டன்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்: கர்னூல் மாவட்டத்தில் அமையவுள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், ஆண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025-ல் இந்தியாவில் இந்த புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இறக்குமதி மீதான அழுத்தத்தைக் குறைக்க நாட்டிற்கு உதவும் என்றும், இது இந்தியாவின் நடப்புக் கணக்கு இருப்பிற்கு (Current Account Balance) சாதகமானது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய தங்கச் சந்தையின் நிலை

இந்தியா உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தைகளில் ஒன்றாகும். இந்திய குடும்பங்கள் 25,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்து உள்ளனர், இது மத்திய வங்கியின் மொத்த கையிருப்பை விட மிக அதிகம். இந்தியா பெரிய அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு அல்ல. உலக தங்க கவுன்சில் (World Gold Council) மதிப்பீட்டின்படி, 2024-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தங்க விநியோகத்தில் சுமார் 86% இறக்குமதி மூலமே பெறப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி என்பது அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே.

2024-ம் ஆண்டில், இந்தியாவின் தங்கத் தேவை 800 டன்களுக்கும் அதிகமாக இருந்தது, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட அத்தனை அளவையும் இறக்குமதி செய்தது. வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகள், 2024-ம் ஆண்டுக்கான தங்க இறக்குமதி அளவை 724 டன்னில் இருந்து 812 டன்னாக திருத்தியுள்ளன. (ஜூலை-அக்டோபர் 2024 வரையிலான இறக்குமதி புள்ளிவிவரங்கள் திருத்தப்பட்டுள்ளன.)

2024-ல் இந்தியாவின் மொத்த நுகர்வோர் தங்கத் தேவை 802.8 டன்களாக இருந்தது. இது உலக மொத்த தங்கத் தேவையில் 26% ஆகும். இதன் மூலம், 815.4 டன்கள் நுகர்வோர் தேவையுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 2022 ஆம் ஆண்டு முதல் தங்கத்தை பெருமளவில் வாங்கி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தங்கக் கையிருப்பும் 2025ல் கிட்டத்தட்ட 880 டன்களாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (YTD) 50% க்கும் மேல் விலை உயர்ந்து, தங்கம் தற்போது ஒரு அவுன்ஸ் சுமார் $4,077 க்கு வர்த்தகமாகிறது. இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை (தோராயமாக) ரூ. 1,22,700 ஆக உள்ளது. இந்த அதீத விலையேற்றம், 2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டில் (Q3) நகை வாங்கும் தேவையைக் குறைத்துள்ளது; நுகர்வோர் தங்கத் தேவை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் (yoy) சுமார் 16% குறைந்துள்ளது.

புதிய தங்கச் சுரங்கக் கண்டுபிடிப்புகள் இறக்குமதி அழுத்தத்தைக் குறைக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் அது குறிப்பிடுவதாவது: சமீபத்திய விலை ஏற்ற இறக்கம் (அக்.2025-ல் தங்கம் உச்சத்தை தொட்டது) நடப்பு இருப்பு பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நடப்பு ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் தங்கத்தின் விலை சுமார் $4000/ அவுன்ஸ் என்ற அளவிலேயே நீடிக்கும் என்றும், கடந்த ஆண்டின் இறக்குமதி அளவில் 90% இறக்குமதி செய்யப்படும் என்றும் கருத்தில் கொண்டால், இது நமது CAD-ஐ, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதிகபட்சமாக 0.3% வரை மட்டுமே அதிகரிக்கும். நிதியாண்டு 26-ல் (FY26) ஒட்டுமொத்த CAD, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.1% என்ற சீரான அளவிலேயே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/business/india-discovers-new-gold-mines-in-odisha-madhya-pradesh-and-andhra-pradesh-10645454