ஞாயிறு, 16 நவம்பர், 2025

எஸ்.ஐ.ஆர்: வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

 

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (Special Intensive Revision - SIR) முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் முதல் முகவரி வரை அனைத்துத் தகவல்களும் சரிபார்க்கப்படவும், புதுப்பிக்கப்படவும் உள்ளன. இந்தச் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR - 2026) ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கே காணலாம்.

. ஆன்லைனில் உள்நுழைதல் மற்றும் பதிவு செய்தல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை போர்ட்டலான voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். நீங்க ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், உங்க கைபேசி எண், மின்னஞ்சல்/EPIC எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால், உடனடியாகப் பதிவு செய்து (Sign-Up) லாகின் செய்து கொள்ளலாம்.

sir1

2. விண்ணப்ப படிவத்தைத் தொடங்குதல்

உள்நுழைந்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Special Intensive Revision (SIR) – 2026' என்பதைக் கிளிக் செய்யவும். அதன் கீழ் உள்ள 'Fill Enumeration Form' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். மாநிலத்தைத் தேர்வு செய்யவும். உங்க தற்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No.) உள்ளிட்டு, விவரங்களைத் தேடிக் கண்டறியவும். உங்க பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.

sir 2

3. தகவல்களைச் சரிபார்த்தல் மற்றும் குடும்ப இணைப்பைச் சேர்த்தல்:

ஓ.டி.பி. சரிபார்ப்புக்குப் பிறகு, உங்க தகவல்கள் பாதியளவு நிரப்பப்பட்ட Enumeration Form ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்க்கவும்.

குடும்ப இணைப்பு (Family Linkage) பூர்த்தி செய்யும் முறை:

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் பெயரை ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் ஒரு முக்கியமான பகுதி இதுவாகும். கடைசியாக எஸ்.ஐ.ஆர் திருத்தப் பணி 2002 அல்லது 2005-ல் நடந்ததால், 1987-க்குப் பிறந்தவர்கள் உட்பட பலரது பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.

sir 3

தேர்வு செய்தல்: படிவத்தின் கீழே வரும் 3 விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்:

முன்னர் செய்த மாற்றத்தில் இடம்பெற்றிருந்த உங்களது பெயர் நினைவிருந்தால் அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். யாருடைய பெயரும் நினைவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆதார் எண் கட்டாயம் தேவை. ஆதார் எண்ணிலுள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

sir 4

உறவினர் விவரங்களைச் சேர்ப்பது: உங்களுக்கு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணோ, பெயரோ, தொகுதியோ ஏதாவது ஒன்று தேவை. படிவத்தில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தித் தேடிக் கண்டறிந்து பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். உறவினரின் தகவலை உறுதி செய்த பின், கேட்கும் மற்ற தகவல்களை உள்ளிட்டு, படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (Submit).

4. விண்ணப்ப நிலையை அறிதல் மற்றும் கவனிக்க வேண்டியவை

சமர்ப்பித்த பின், உங்க விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஒப்புதல் எண் (Acknowledgement Number) ஒன்று வழங்கப்படும். இதை அவசியம் குறித்து வைத்துக்கொள்ளவும். படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இணையதளத்தில் உள்ள "Book a call with BLO" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ அல்லது 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ உங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (BLO) உதவி கேட்கலாம்.

நீங்க கொடுத்த தகவலைச் சரிபார்க்க, BLO உங்களை அழைக்கலாம் அல்லது உங்கள் இல்லத்திற்கே வரலாம். அப்போது உங்கள் விவரங்களைப் பார்க்க வேண்டும். படிவத்தைப் பூர்த்தி செய்ய EPIC எண், ஆதார் எண், மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் EPIC எண் ஆகியவை கட்டாயம் தேவை.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-voter-list-sir-2026-how-to-apply-online-for-special-intensive-revision-and-verify-your-details-10778327