ஞாயிறு, 16 நவம்பர், 2025

பீகார் தேர்தலில் படுதோல்வி; காங்கிரஸ் தவறை அறிக்கையில் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின்

 

Stalin 2

பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் என்.டி.ஏ கூட்டணி 204 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸின் இந்தியா கூட்டணி வரலாற்றில் இல்லாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் சட்டமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, வெளியிட்ட அறிக்கையில்,, காங்கிரஸ் தலைமைக்கு ஒரு நுட்பமான செய்தியைத் கொடுத்துள்ளார். இதில், மையப்படுத்தப்பட்ட முழக்கங்கள் அல்ல, மாறாக அரசியல் தெளிவு, கூட்டணி ஒழுக்கம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த நம்பகத்தன்மையே தேர்தல்களைத் தீர்மானிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், ஜே.டி.யு. கட்சித் தலைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான நிதீஷ் குமாரின் "தீர்க்கமான வெற்றிக்கு" வாழ்த்துத் தெரிவித்த ஸ்டாலின், பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவின் "சோர்வில்லாத பிரச்சாரத்தை" அவர் பாராட்டினார்.

தொடர்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்த மு.க.ஸ்டாலின், “மக்கள் நலத் திட்டங்களை வழங்குதல், சமூக மற்றும் சித்தாந்த ரீதியான கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்திகள் மற்றும் கடைசி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகம் ஆகியவற்றையே தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்று கூறியுள்ளர். இந்த கருத்து எதிர்க்கட்சி வட்டாரங்களில் பலரும், காங்கிரஸ் கட்சிக்கு எங்கு தவறு நேர்ந்தது என்பதை கவனத்துடன் நினைவூட்டும் செய்தியாக கூறி வருகின்றனர்.

பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது, இது மாநிலத்தில் அக்கட்சிக்கு ஒரு வரலாற்றுச் சரிவாகும். மு.க. ஸ்டாலின் ஒரு மூத்த தலைவராக இருக்கும் 'இந்தியா' கூட்டணிக்கு, பீகார் தேர்தல் தீர்ப்பு ஒரு ஆழமான அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு இடைவெளியை சுட்டிக்காட்டுகிறது. இந்த தவறை விரைந்து சரிசெய்யப்படாவிட்டால், 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலை பாதிக்கும் அபாயம் உள்ளது. 

மு.க.ஸ்டாலின் கருத்துக்கள் இரண்டாவது, கூர்மையான அம்சத்தையும் பதிவு செய்துள்ளது, அது தேர்தல் ஆணையத்தின் மீது நேரடித் தாக்குதல். “இந்தத் தேர்தலின் முடிவு, தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் மூடிமறைக்காது,” என்று அவர் கூறினார். இந்த அமைப்பின் நற்பெயர் “அதன் மிகக் குறைந்த நிலையில் உள்ளது” என்று வாதிட்ட அவர், “வலுவான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் தேவை, அதன் தேர்தல் நடத்தை, தோல்வியை சந்தித்தவர்களுக்கு கூட நம்பிக்கையைத் தூண்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அரசியல் பார்வையாளர்களுக்கு, ஸ்டாலின் இந்தக் கூற்று நடைமுறைச் சாத்தியமானதாகவும், வியூக ரீதியாகவும் உள்ளது. இது, பிராந்தியக் கூட்டணிகள் காங்கிரஸிடம் இருந்து செய்தி அனுப்புதல் மற்றும் கள நிர்வாகம் குறித்து ஆழமான சுயபரிசோதனையை எதிர்பார்க்கின்றன என்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் ஜனநாயகம் அழுத்தத்தில் உள்ளன என்ற கருத்தையும் இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

மக்கள் நலத் திட்டங்களை வழங்குதல்" என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பது, சமூக நீதி மற்றும் மாநிலத்தின் தலைமையிலான நலத்திட்டங்கள் அதன் தேர்தல் பலத்தின் மையமாக இருக்கும் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் அரசியல் இலக்கணத்தை எதிரொலிக்கிறது. பீகார் தோல்வியை “அனைவருக்கும் ஒரு பாடம்” என்று கட்டமைப்பதில், அவரது தொனி இணக்கமானதாக உள்ளது. வெற்றிகள் வேரூன்றி நிற்பவர்களுக்கும், தெளிவாகத் தொடர்புகொள்பவர்கள், சோர்வில்லாமல் களப்பணி ஆற்றுபவர்களுக்குமே சொந்தம் என்றும் கூறியள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/congresss-bihar-loss-mk-stalin-clarity-welfare-groundwork-win-elections-10778611