செவ்வாய், 11 நவம்பர், 2025

அனைத்து கோணங்களில் விசாரணை

 

says Amit Shah

அனைத்து கோணங்களிலும் விசாரணை: டெல்லி கார் வெடிவிபத்து குறித்து அமித் ஷா உத்தரவு

டெல்லியில் செங்கோட்டை அருகே இன்று மாலை நிகழ்ந்த கார் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அனைத்து விசாரணை அமைப்புகளும் விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்றும், எந்தவொரு கோணத்தையும் நிராகரிக்காமல் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை மாலை 6.50 மணியளவில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த கார் திடீரென தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை: "இன்று மாலை சுமார் 7 மணியளவில் டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த ஹூண்டாய் ஐ-20 காரில் வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில் பாதசாரிகள் சிலர் காயமடைந்தனர், சில வாகனங்களும் சேதமடைந்தன. முதற்கட்ட தகவல்களின்படி, சிலர் உயிரிழந்துள்ளனர்," என்று அமித் ஷா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "கார் வெடிப்பு குறித்த தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டன. என்.எஸ்.ஜி(NSG), என்.ஐ.ஏ (NIA) குழுக்கள் எஃப்எஸ்எல் (FSL) உடன் இணைந்து தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசினேன்."

டெல்லி காவல் ஆணையரும், சிறப்புப் பிரிவு பொறுப்பாளரும் சம்பவ இடத்திலேயே உள்ளனர். நாங்க அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். அனைத்து கோணங்களும் உடனடியாக விசாரிக்கப்பட்டு, அதன் முடிவுகளை பொதுமக்களுக்கு வெளியிடுவோம். நான் விரைவில் சம்பவ இடத்திற்கும், காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் செல்லவுள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காயமடைந்த நபர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்த அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.

காவல்துறையின் தகவல்: "லால் கிலா (செங்கோட்டை) மெட்ரோ நிலையத்திற்கு வெளியே ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பின் தன்மை இன்னும் தெரியவில்லை, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்" என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அது ஓடிக்கொண்டிருந்த ஒரு கார், அதில் 2 அல்லது 3 பேர் இருந்தபோது அது தீப்பற்றி எரிந்தது. நாங்க உண்மைகளைச் சரிபார்த்து வருகிறோம்" என்று டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா, செங்கோட்டைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

தீவிர அதிர்வு: இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் ஜன்னல்களும் உடைந்தன. வெடிச்சத்தம் சம்பவ இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உள்துறை அமைச்சரிடம் பேசியதுடன், நிலைமை குறித்த தகவல்களைக் கோரினார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/india/delhi-red-fort-blast-exploring-all-possibilities-will-conduct-thorough-probe-says-amit-shah-10645550