/indian-express-tamil/media/media_files/2025/11/14/minister-c-v-ganesan-free-bicycle-scheme-pudhumai-penn-scheme-education-schemes-tamil-nadu-2025-11-14-18-43-47.jpg)
Cuddalore
மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல அரசு உயர்பதவிகளை அடைவதுடன், தங்களது வாழ்க்கைத்தரத்தினையும் உயர்த்திக்கொள்ள முடியும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடக்கம்
துணை முதலமைச்சர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை இன்று தொடங்கிவைத்ததைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அமைச்சர் சி.வெ.கணேசன் உரை
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து, அவற்றை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
கல்விக்கு முக்கியத்துவம்: தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியினைப் பயில வேண்டும் என்பதற்காகவும், கல்வி கற்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
சிறப்புத் திட்டங்கள்: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகள் பசியில்லாமல் கல்வி கற்க ஏதுவாக காலை உணவு திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியினை அடைய வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்களைப் போக்குவதற்காகவும், ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஒரு உயர்கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்கிடும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் மிதிவண்டிகள் விநியோகம்
இக்கல்வியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 146 மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 20,351 மாணவ/மாணவிகளுக்கு, மொத்தம் ரூ.9,82,56,760 மதிப்பீட்டிலான மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4,900 என்றும், மாணவிகளுக்கான ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4,760 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறிவுரை
தமிழ்நாடு முதலமைச்சர், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றிட ஏதுவாக, பள்ளிகளில் தேவைக்கேற்ப கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் என அனைத்து உபகரணங்களும் வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே, மாணவர்கள் தங்களது படிப்பில் முழு கவனத்தினைச் செலுத்த வேண்டும் என்றும், சிறந்த முறையில் கல்வி கற்றால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல அரசு உயர்பதவிகளை அடைவதுடன், தங்களது வாழ்க்கைத்தரத்தினையும் உயர்த்திக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சி.வெ.கணேசன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-c-v-ganesan-free-bicycle-scheme-pudhumai-penn-scheme-education-schemes-tamil-nadu-10775031





