/indian-express-tamil/media/media_files/2025/11/24/archana-patnaik-tamil-nadu-electoral-roll-verification-sir-forms-voter-list-update-election-commission-tamil-nadu-2025-11-24-17-29-18.jpg)
எஸ்.ஐ.ஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம்தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது என்றும், அதற்குள் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பற்றி இங்கு பார்ப்போம்.
சிறப்புத் தீவிர திருத்தப் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எனத் தேர்தல் துறை முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்:
கணக்கீட்டு படிவங்களைப் பெற்ற வாக்காளர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, டிச.4 வரை காத்திருக்காமல் உடனடியாகப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 4-ம் தேதிக்குள் கணக்கீட்டு படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள், டிச.9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
3 முறை அதிகாரிகள் வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் விடுபட்டால் என்ன செய்வது?
வரைவுப் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்துப் புதிதாக விண்ணப்பிக்கலாம். 2002/2005 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ, உறவினர் பெயரையோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை நிரப்பி டிசம்பர் 4-க்குள் படிவத்தை ஒப்படைத்தால், அவர்களது பெயர் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு முகவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கணக்கீட்டு படிவங்களை மட்டுமே உறுதிமொழியுடன் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
முக்கியத் தேதிகள் (Timeline)
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 09.12.2025
பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் (Claims and Objections): 09.12.2025 முதல் 08.01.2026 வரை.
விசாரணை காலம் (Notice Phase): 09.12.2025 முதல் 31.01.2026 வரை.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 07.02.2026.
வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டு உள்ளார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/deadline-alert-submit-voter-verification-forms-by-dec-4-or-risk-name-deletion-tn-chief-electoral-officer-announcements-special-summary-revision-timeline-key-instructions-10818751





