ஞாயிறு, 12 ஜூலை, 2026

நேரலை விவகாரம்: பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்

 10 07 2026

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான பணி ஆணைகளை வழங்குவதற்காகக் கரூர் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற நிகழ்வில் ஆளும்கட்சியான தி.மு.கவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், ஜோசப் விஜய்யின் அரசியல் பேச்சை மாணவர்களுக்கு வகுப்பறையில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்வுகளுக்கோ அல்லது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கோ இடமில்லை; இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்திருந்தார். தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களுக்குள் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது. தன்னிச்சையாக முடிவெடுத்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிகழ்வை நேரலை செய்து மாணவர்களுக்குத் திரையிட்டது முற்றிலும் தவறான செயலாகும்.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் விஜய்யின் அரசு சாரா அரசியல் பேச்சை நேரலை செய்த தலைமை ஆசிரியர் மல்லிகா இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். தவெக கட்சி நிகழ்ச்சியை வகுப்பறையில் ஒளிபரப்பிய விவகாரத்தில், கரூர் மதனந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி அரசியல் நிகழ்வுகளை நேரலை செய்யும் ஆசிரியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனத் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/strict-action-in-karur-tvk-live-broadcast-in-classrooms-two-govt-school-headmistresses-suspended-in-karur-12155679