ஞாயிறு, 12 ஜூலை, 2026

பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகள்,சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

 வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 ஊழியர்களுடன் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரச் சம்பவத்தில் தமிழர்கள் உட்பட 18 இந்திய பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களில் 12 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவர், எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என திருச்சியைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒருவரும் இதில் பலியாகியுள்ளார். காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணி கடற்படையினரால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகில் பயணித்த 32 இந்தியர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் தமிழர்களின் பெயர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன. விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 10 தமிழர்கள் இருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' (X) சமூகவலைதளப் பதிவில், இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்த சம்பவம் துயரமளிக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்வதால், சம்பவம் குறித்த துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்; தூதரகக் கட்டுப்பாட்டு அறை +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414

ஹனோய் கட்டுப்பாட்டு அறை: +84 91 308 9165 பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதியளித்துள்ளது. ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குச் சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில், உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும் திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tragedy-in-vietnam-18-indian-tourists-including-3-from-trichy-die-as-boat-capsizes-near-phu-quoc-island-12155277