வெள்ளி, 25 நவம்பர், 2016

வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது.. மத்திய அரசு அறிவிப்பு

வங்கியில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து மாற்றிக்கொள்ளும் முறை முடிவுக்கு வந்துள்ளது.
இதனை அறிவித்துள்ள மத்திய அரசு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக‌ள் குறித்து ஆய்வு செய்து, இந்த முடிவுகளை அறிவித்திருப்பதாக கூறியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,, வங்கி கவுன்ட்டர்களில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இனி மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரக் கட்டணச் சேவைகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை 500 ரூபாய் நோட்டுகளை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் 2 ஆயிரம் ரூபாய் வரை பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி கல்விக்கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும், அந்தந்த மாநில அரசுகளின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் ஒரே நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி 5 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய 500 ரூபாயை பயன்படுத்தி, பிரீபெய்டு மொபைல்களில், 500 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெளிநாட்டினர், ஒரு வாரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, டிசம்பர் 30ம் தேதி வரை பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.