தர்மபுரி,
தர்மபுரி அருகே டியூசன் சென்டரில் படிக்க சென்ற 30 மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உல்லாசமாக இருந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மாணவி பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சில நண்பர்களுடன் சேர்ந்து பாலக்கோட்டில் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். இதில் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவ–மாணவிகள் டியூசன் படித்து வந்தனர். இதேபோல் தர்மபுரியிலும் ஒரு டியூசன் சென்டர் நடத்தினார்.
இந்த நிலையில் பாலக்கோட்டில் இவரிடம் டியூசன் படிக்க வந்த ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதனை செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய நண்பரான ஈஸ்வரன் மூலம் செல்போனில் இருந்த காட்சிகள் வெளியானது.
வாலிபர் கைது
இதுதொடர்பாக பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 4–ந்தேதி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது டியூசனுக்கு வந்த மாணவிகளில் பலருக்கு மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், 30 மாணவிகள் இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதன் விவரம் வருமாறு:–
பலாத்காரம்
பாலக்கோட்டை சேர்ந்த சிவக்குமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகியோர் டிப்ளமோ படித்தவர்கள். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கோட்டில் டியூசன் சென்டர் தொடங்கினர். பின்னர் தர்மபுரியிலும் டியூசன் சென்டரை தொடங்கி நடத்தினார்கள். இந்த நிலையில் பாலக்கோட்டில் உள்ள டியூசன் சென்டருக்கு வரும் மாணவிகளில் அழகாக இருக்கும் மாணவிகளை சிவக்குமார் தனியாக அழைத்து பாடம் சொல்லித்தருவது போல் நெருங்கி பழக தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் சில மாணவிகளை தனியாக சந்திக்கும்போது அவர்களுக்கு டீ, குளிர்பானம் ஆகியவற்றில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதை செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு அதனை சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் காட்டி தொடர்ந்து அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
2 பேர் கைது
இதுபற்றி தெரிந்து கொண்ட சிவக்குமாரின் நண்பர் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகியோரும் சம்பந்தப்பட்ட மாணவிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களால் 30 மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய நபராக கருதப்படும் சிவக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவக்குமார் மற்றும் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகிய 3 பேரிடம் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாவாயி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தர்மபுரியில் உள்ள சென்டரிலும் இதுபோன்ற சம்பவம் நடத்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.