வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் புதிய பணத்தின் அளவு 80 சதவீதமாக உயரும்போது, பணம் எடுக்க தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தைத் தடுக்கவும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு அம்சங்களுடனான 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால், வங்கிகளில் இருந்து மக்கள் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே தனிநபர் ஒருவர் எடுக்க முடியும் எனவும் ஏடிஎம்மில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 வரை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்பது குறித்து நிதியமைச்சக அதிகாரிகள் தற்போது விளக்கமளித்துள்ளனர். தற்போது வங்கிகளில் செலுத்தப்படும் ரூபாய் நோட்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர், இது அப்படியே அதிகரித்து வங்கிகளுக்கு வரும் பணம் 80 சதவீதமாக உயரும் போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார். அவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது கூட்டுறவு வங்கிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதன் பயனை முதலில் பெறுவார்கள் என்றும் புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு முழுவதுமாக சென்று சேர்ந்த பின்னர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதிவு செய்த நாள் : December 15, 2016 - 03:45 PM