புதன், 2 நவம்பர், 2016

மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி

உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இம்மாநிலத்தின்  ஜமத்தாரா மாவட்டத்தின் திக்ஹரி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை தொழில் செய்துவந்தவர் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி. அவர் பசுக்கன்றுடன் தான் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை வாட்ஸ் அப் குழுமத்தில்  பதிவிட்டதாகவும் தொடர்ந்து அவரது  நண்பர் ஒருவர் மாட்டிறைச்சி படம் வெளியிட்டதாகவும் கூறி இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் அப்பகுதி விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்.
ansari
அதை தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி(03-10-2016) மின்ஹாஸ் அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் ஷாபன், பஹிம் ஆகியோரை ஏதோ பயங்கரவாதிகளைப் பிடிப்பது போல கைது செய்துள்ளது ஜார்க்கண்ட் போலீஸ். “இரவு 9 மணிவாக்கில் மினஹாஸின் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தோம். அப்போது இரண்டு பைக்குகள் மற்றும் ஒரு வண்டியில் 10 பேர் வந்து இறங்கினார்கள். அவர்கள் சீருடையில் இல்லை. எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் ஓடினோம்.  அவர்களை ஏதோ கிரிமினல்கள் என்று தான்  முதலில் நினைத்தோம்.” என்கிறார் கொல்லப்பட்ட அன்சாரி உடன் சேர்த்து கைது செய்யப்பட்ட ஷாபன்.
காவல் நிலையத்திலும் இவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் மற்றும் ஆறு காவலர்கள் சேர்ந்து இவர்களை தாக்கியிருக்கிறார்கள். போலீசாரோடு சேர்ந்து  விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்கும் காவல்நிலையத்தில் வைத்து இவர்களை அடித்திருக்கிறான். “ மின்ஹாஸை மட்டும் தனியாக வேறு அறைக்கு அழைத்து சென்று அடித்தார்கள். அவனது அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவனை எங்கள் அறையில் சேர்க்கும்போது அவன் காதில் இரத்தம் வழிவதை பார்த்தோம். நாங்கள் அவனுக்கு உணவு ஊட்ட முயற்சித்தோம் அது வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது” என்கிறார் ஷாபன்.
மின்ஹாஸின் கதறல்களை போன் மூலம் அவரது குடும்பத்தினரை கேட்க வைத்து உளவியல் சித்தரவதை செய்திருக்கிறார் ஹரிஷ் பதக். “ பதக் எங்களுக்கு போன் செய்து நாங்கள் மின்ஹாஸின் கதறலை கேட்கும்படிக்கு அவனை அடித்தார். பின்னர் போனில் மின்ஹாசிடம் பேசவும் அனுமதித்தார். என் வாழ்க்கை அபாயத்தில் இருக்கிறது. அவர்கள் கேட்பது அனைத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று மின்ஹாஸ் எங்களிடம் கூறினான்” என்கிறார் மின்ஹாஸின் சகோதரி குல்ரோஷன். பின்னர் தங்கள் வீட்டிற்கு வந்த போலீசார் தங்களிடமிருந்து ரூ. 3000 பணமும், மோட்டார் சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார்கள். தற்போது மின்ஹாஸ் கொலை செய்யப்பட்ட பிறகு அவற்றை திருப்பி அளித்துள்ளார்கள்.
மறுநாள்(06-10-2016) காலை அன்சாரியின் மாமா குலாம் முஸ்தபா மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மீதான  வசை சொல்லை கொண்டு இவர்களை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்  அன்சாரியை சந்திக்க அனுமதி மறுத்துள்ளனர். தான் காவல் நிலையம் சென்ற போது அங்கு விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங் இருந்ததாகவும் அவன் மின்ஹாஸ் அன்சாரியை தாக்கியதாகவும், கூடுதலாக அடித்து துன்புறுத்தும்படி சப்-இன்ஸ்பக்டரை கேட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார் குலாம் முஸ்தபா.  ஜமத்தாரா எம்.எல்.ஏ இர்பான் அலி  தலையிட்ட பின் அன்சாரி தவிர மற்ற இருவரை விடுவித்திருக்கிறார்கள்.
அக்டோபர் 5-ம் தேதி அன்சாரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பதாக எம்.எல்.ஏ-விடமிருந்து தகவல் கிடைக்கவே அங்கு சென்றிருக்கிறார்கள் அன்சாரியின் பெற்றோர். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் இவர்களை அன்சாரியை பார்க்கவிடமுடியாது என்று தடுத்திருக்கிறார்.மேலும் அன்சாரியின் தாயை தள்ளிவிட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அன்சாரியின் பெற்றோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியுள்ளார் ஹரிஷ் பதக்.
ansari-wife-and-child
“எங்களை இறுதியாக அனுமதித்தபோது அன்சாரி நினைவில்லாமல் கிடந்தான். அவன் அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்தாள், ஆனாலும் அவனிடமிருந்து எந்த அசைவுமில்லை” என்கிறார் அன்சாரியின் தந்தை உமர் அன்சாரி.
அன்சாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் “வயிற்று சளி முழுவதும் இரத்தத்தால் தோய்ந்திருக்கிறது. வயிறு காலியாக இருந்தது. குடலின் 3-ல் இரண்டு பகுதி இரத்தத்தால் நிறைந்திருக்கிறது. கூர்மையற்ற உறுதியான பொருட்களின் மூலம் இந்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட இரத்தபோக்கு மற்றும் அதிர்ச்சியின் காரணமாக சாவு நேர்ந்துள்ளது”  என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் அன்சாரி தாக்கப்பட்டதற்கான நேரடியான சாட்சியங்கள் இருந்தாலும் இன்னும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவன் சோனு சர்மா ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கண்துடைப்பிற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இறந்துபோன அக்லக்கின் கொலையாளிக்கு மூவர்ண கொடியுடன் இறுதி மரியாதை செய்யப்படுகிறது.
இந்துமத வெறியர்களின் கோமாதாக்களை தெருக்களில் வீசி எறிந்து குஜராத்தில் தலித் மக்ககள் நடத்தி வரும் போராட்டத்தை அடுத்து தலித்கள் மீதான் தாக்குதலுக்கு “தலை குனிகிறேன்” என்று மோடி உதிர்த்த வார்த்தைகள் நரித்தனமானது என்பதை நிரூபிக்கிறது ஜார்க்கண்ட் கொலை.
போலீசுடன் இணைந்து கொலை செய்யும் இந்து மத வெறி பாசிஸ்டுகளை போலீசை கொண்டு வீழ்த்த முடியாது என்பதையும் இப்படுகொலை நிரூபிக்கிறது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்டம் போட்ட ஆதிக்க சாதிவெறி ரன்வீர் சேனா, பூமிகார் சேனா கும்பல்களை நக்சல்பாரிகள் ஒடுக்கியதற்கு பிறகே தலித் மக்கள் மூச்சுவிட முடிந்தது.  அதே போன்று முசுலீம் மக்களும் மார்க்சிய லெனினிய கட்சிகளில் இணைந்து போராடுவது ஒன்றே இதற்கு தீர்வு.
போலீசுதான் பிரச்சினை, நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என்று நீங்கள் கருதினால் சமீபத்திய நீதித்துறை சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகள் உங்களுக்கானது தான்.
“மேற்கு வங்க அரசு சிறுபான்மையினரை திருப்திபடுத்த பெரும்பான்மையினருக்கு எதிராக நடந்துகொள்கிறது. மொஹரம் என்பது முஸ்லீம்களின் முக்கியமான விழா அல்ல. மொஹரத்திற்கு நடக்கும் ஊர்வலமும் தவிர்க்க முடியாதல்ல. ஆனால் துர்க்கா பூஜை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அரசின் திடீர் முடிவுகளுக்காக அதை மாற்ற முடியாது”
துர்கை சிலைகள்
மேற்கண்ட பேச்சு ஏதாவது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பி.ஜே.பி தலைவர்களுடையது அல்ல. மேற்குவங்க உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. நவராத்திரி மற்றும் மொஹரம் விழாக்கள் அடுத்தடுத்து நடப்பதால்  துர்கை சிலையை கரைப்பதற்கு நேர ஒதுக்கீடு செய்திருந்தது அம்மாநில அரசு. அதை எதிர்த்து வழக்கு ஒன்றில் “சிறுபான்மையினரை திருப்திப்படுத்த” என்று நீதித்துறை ‘மாண்புகளுக்கு’ எதிராக நேரடியாகவே பூணூலை உருவி களத்தில் குதித்திருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம். இந்த இலட்சணத்தில் இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
அடுத்து பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றவாளிகளை விடுவித்து தீர்ப்பு வழங்கிய முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற  நீதிபதி பெஹ்ரா ஜெஹன்பக்ஸ் சேத்னா என்பவர் சமீபத்தில் அம்மாநில இழிபுகழ்  டி.ஜி.பி வன்சரா தொடங்கியிருக்கும் தொண்டு நிறுவனத்தின் தொடக்க  விழாவில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
“ தீவிரவாதம் என்பது தீவிரவாதிகளால் மட்டும் தனியாக நிகழ்த்தப்படுவதல்ல. நீதித்துறையிலும் தீவிரவாதம் இருக்கிறது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நான் விடுவித்ததோடு வழக்கு தொடர்ந்த என்.ஜி.ஓ மீது விசாரணை நடத்த உத்தவிட்டேன். ஆனால் என் தீர்பை மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்கை மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றியதோடு என்.ஜி.ஓ மீது விசாரிக்க உத்தரவிட்ட எனது உத்தரவையும் மாற்றியிருக்கிறது. இந்த வழக்குக்கு ஏன் அவ்வளவு முன்னுரிமை. தீவிரவாதிகளை கொன்ற பல போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாகூப் மேனன் தூக்கிலிடப்படும் முன்னர் நள்ளிரவில் அவரது கருணை மனுவை பரிசீலிக்க தேவை என்ன? “ என்று கேள்வி எழுப்பி இந்நாட்டில் நீதித்துறை தீவிரவாதம் நிகழ்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார், மேற்படி நீதிபதி. மோடி என் பிரதமரானார், ஆர்.எஸ்.எஸ் ஏன் தொடர்ந்து கலவரங்களை நடத்துகிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
செய்தி ஆதாரம்: