திங்கள், 14 நவம்பர், 2016

சினிமா டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும்போது, நாட்டு வளர்ச்சிக்காக சிரமப்பட முடியாதா?.. நீதிமன்றம் கேள்வி

சினிமா டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க முடியும்போது, நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்துள்ள பொருளாதார நடவடி‌க்கையால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள முடியாதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ராமமூர்த்தி என்பவர் மனு தாக்க‌ல் செய்துள்ளார். அதில், தனது வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் தேவைக்காக பணம் அளிக்க மறுக்கப்படுவதாக கூறிய அவர், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கான நிதி முறைகள் மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் வரும் என ரிசர்வ் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆஜரான மத்திய கூட்டுறவு வங்கியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு வேண்டிய பணத்தை மத்திய கூட்டுறவு வங்கிகளில் எடுத்துக்கொள்ளலாம் என கூறினார். கிராமத்தில் வங்கிக் கணக்கு வைத்துக்கொண்டு‌, 50 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் குறைந்த அளவில் பணத்தை எடுக்கும் முறை எப்படி சாத்தியமாகும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, விடுமுறை நாட்களில் கூட சேவையாற்றும் வங்கி ஊழியர்களை சுட்டிக்காட்டி, தானும் பணப்பரிவர்த்தனைக்காக சிரமப்பட்டதாக தெரிவித்தார். சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Related Posts: