சனி, 19 நவம்பர், 2016

கட்டுமான திட்டத்தில் அன்றாட செலவுகளுக்காக

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, கட்டுமான நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
5‌00 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதிலும், அத்தகைய ரூபாய் நோட்டுகளை சில கட்டுமான நிறுவனங்கள் பெறுவதாக புகார் எழுந்தது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான திட்டத்தில் அன்றாட செலவுகளுக்காக 10 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை ரொக்கத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் அத்தகைய வசதியை சில நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு அவை ஏற்கனவே கையிருப்பில் உள்ள பணம் என கட்டுமான நிறுவனங்கள் கணக்கு காட்டுவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, டெல்லி, நொய்டா, பெங்களூரு, மீரட், அலகாபாத், லக்னோ, கொல்கத்தா உள்ளிட்ட பல‌வேறு நகரங்களில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் 12 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நாட்டின் பிற பகுதிகளிலுள்ள கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படும் என வருமான வரித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

Related Posts: