1 4 23
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே,பி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பா.ஜ.க பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீட்டுள்ளது. இதில் முக்கியமான வாக்குறுதிகள், இலவசங்களை அறிவித்துள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் குறிப்பாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் நந்தினி பால், பெண்களுக்கு பஸ் பாஸ் ஆகியவகைகள் இலவசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும்.
இந்து பண்டிகைகளில் இலவச சிலிண்டர்
பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சட்டவிரோதமாக குடியேறியவர்களை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். என்.ஆர்.சி அமல்படுத்தப்படும். மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும். கர்நாடகாவில் அண்மையில் நந்தினி அமுல் பால் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில் இது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில் பி.பி.எல் திட்ட பயனாளர்களுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும்.வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சூரிய ஒளி பம்பு செட் அமைப்பவர்களுக்கு 80% மானியம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தலைநகர் பெங்களூருவுக்கு சில முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில், யுவா-கருநாடு-டிஜிட்டல் 4.0 திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் உலகளாவிய கண்டுபிடிப்பு மையம் நிறுவப்படும். தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்தவும், கழிவுகளை குறைக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பெங்களூருக்கு ஸ்மார்ட் வாட்டர் திட்டம். பெங்களூரின் அனைத்து தெருக்களிலும் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/bjp-jp-nadda-releases-party-poll-manifesto-with-cm-basavaraj-bommai-and-former-cm-b-s-yediyurappa-656354/