புதன், 1 பிப்ரவரி, 2017

சிக்கன்கடை சலாவூதீன்... உளவுத்துறை சொல்லிய ஒசாமா பின்லேடன் அனுதாபி இவர்தான்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடனின் அனுதாபிகள் பங்கேற்றதாக மாநில உளவுப்பிரிவு போலீஸார், அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர்.  பின்லேடன் படத்தை ஓட்டிய வாகனத்தில் சென்ற சிக்கன்கடை சலாவூதீன் அந்த ரிப்போர்ட் தவறு என்று தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அறவழியிலும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு  சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ். தொடர்ந்து சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த போராட்டத்தை வன்முறையாக மாற்றியதில் போலீஸாருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். போராட்டம் முடிந்த பிறகும் சென்னையில் இன்னும் போலீஸாரின் அராஜகம் தொடர்வதாக போராட்டக்குழுவினர் சொல்கின்றனர். குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரவாத அமைப்புகளும், வன்முறையாளர்களும் புகுந்து விட்டதாக மாநில உளவுப்பிரிவு போலீஸார் ரிப்போர்ட் என்ற பெயரில்  தீ கொளுத்திப் போட்டனர். இந்த ரிப்போர்ட் அடிப்படையில் சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பின்லேடன் போட்டோ பொறித்த இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் மெரினா பகுதியில் செல்வது போன்ற புகைப்படம் பூதாகரமாக வெடித்தது. உளவுப்பிரிவு போலீஸாரின் இந்த புகைப்படம் ஆதாரம் பொய் என்று ஆணித்தரமாக நிரூபணமாகி உள்ளது. இதன்பிறகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் யார் என்ற விசாரணையில் போலீஸார் களமிறங்கினர். அதற்குள் சமூகவலைத்தளத்தில் பின்லேடனின் அனுதாபிகளாக சொல்லப்பட்ட அந்த இளைஞர்களின் போட்டோ வைரலாகி விட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு அந்த இளைஞர்களுக்கும்,  ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இது உளவுப்பிரிவு போலீஸாருக்கும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக சட்டசபையிலேயே  பின்லேடன் விவகாரம் தொடர்பாக மறு விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
பின்லேடன் போட்டோ பொறித்த இருசக்கர வாகனத்தில் சென்றது இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சலாவூதீன், மாபாஷா என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால், போலீஸார் தாங்கள் தயாரித்த ரிப்போர்ட் சரி என்று சொல்ல அவர்கள் தரப்பில் அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. 
இந்த சூழ்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சலாவூதீனிடம் பேசினோம். "நான் ஓட்டேரியில் குடியிருந்து வருகிறேன். கட்சியில் வட்டச் செயலாளராக உள்ளேன். கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள நானும், என்னுடைய நண்பர் மாபாஷாவும் பைக்கில் சென்றோம். பைக்கை மாபாஷா ஓட்டினார். நான் பின்னால் அமர்ந்திருந்தேன். அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலை வழியாக பைக்கில் சென்ற போது நான் பிரதமர் மோடியின் மாஸ்க்கை அணிந்திருந்தேன். எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் என்னையும், மாபாஷாவையும் செல்போனில் போட்டோ எடுத்தனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்க பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நான், எழுந்து நின்றேன். இந்த போட்டோவை முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் டிசம்பர் மாதமே பதிவு செய்தனர். என்னுடைய பைக்கில் ஒரு கெத்துக்காக பின்லேடன் மற்றும் எங்கள் கட்சியின் தலைவரின் போட்டோவை பொறித்து இருந்தேன். இந்த போட்டோவைப்பார்த்த கட்சித் தலைவர் தடா ரஹீம் சார், அந்த புகைப்படத்தை உடனடியாக கிழித்துவிட்டார். 
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் ஜனவரி 23-ம் தேதி நிகழ்ந்தன. அந்த சமயத்தில் பின்லேடன் போட்டோவை, பா.ஜ.க.வை சேர்ந்த ஹெச்.ராஜா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த போட்டோ அதிகமாக பரவியது. போட்டோ தொடர்பாக என்னையும், மாபாஷாவையும் போலீஸார் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா என்றும் கேள்வி கேட்டனர். அதற்கு நாங்கள் இல்லை என்று தெரிவித்தோம். வன்முறை சம்பவம் நடந்த அன்று நான் வேலைப்பார்க்கும் சிக்கன் கடையில்தான் இருந்தேன். அதற்கு ஆதாரமாக எங்கள் கடையின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் நான் பதிவான காட்சிகள் இருக்கின்றன. 
மேலும், நான் இருசக்கர வாகனத்தை 58,000 ரூபாய்க்கு ராஜி என்பவரிடமிருந்து வாங்கினேன். இன்னும் வண்டியை என்னுடைய பெயருக்கு கூட  மாற்றம் செய்யவில்லை. ராஜி என்பவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருப்பதாகவும் தவறான தகவல்களை சிலர் பரப்பினர். சில மாதங்கள் பைக்குக்கு கடன் தொகை கூட செலுத்தவில்லை. என்னுடைய முகநூல் பக்கத்தில் வீரவாளுடன் நான் இருக்கும் போட்டோ இருந்தது. அதை வைத்துக் கொண்டு என்னை பின்லேடனின் அனுதாபி என்று போலீஸ் தரப்பில் தகவல்கள் பரப்பப்பட்டன. வீரவாளுடன் இருக்கும் என்னுடைய புகைப்படத்தையும்  ஒரு கெத்துக்காகத்தான் பதிவு செய்து இருந்தேன். கெத்துக்காக போடப்பட்ட ஒரு புகைப்படம் எனக்கு இந்தளவுக்கு மனவேதனையை கொடுத்து விட்டது" என்றார்.

இதுகுறித்து மாநில உளவுப்பிரிவு போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, "பின்லேடன் விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பைக்கில் சென்றவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளோம். சம்பவத்தன்று அவர்களது செல்போன் சிக்னல்கள் மெரினாவை காட்டுகிறது" என்றார்.