வியாழன், 2 பிப்ரவரி, 2017

போலீஸ், மாணவர்களை அடிக்க எத்தகைய லத்திகளைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா..?

சென்னை மெரினாவில் காவல்துறையினால் நடத்தப்பட்ட லத்தி சார்ஜ், இன்னும் பலரது கண்களில் இருந்து நீங்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம், பார்க்கும் மனிதர்கள்மேல் காவலர்கள் தங்களுடைய லத்திகளால் தாக்கினர். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு, கை எலும்புகள் உடைந்திருக்கின்றன. இந்த போலீஸாரின் களேபரம், வீடியோக்களாகப் பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. கூட்டத்தைக் கலைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த லத்தி சார்ஜ், தற்போது வன்மையாகத் தாக்கப்படுவதிலும் பங்குவகிக்கிறது. 
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும், பாலிகார்பனேட் பாதுகாப்பு லத்திகளைக்கொண்டு பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். இந்த வகையான லத்திகள்தான், போராட்ட நேரங்களில் காவலர்களிடம் அதிகமாகக் கொடுக்கப்படுகின்றன. இவற்றை, முதன்முதலில் சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய பாதுகாப்புப் படையினர்தான் பயன்படுத்திவந்தனர். தற்போது, தமிழகக் காவல் துறையிலும் இவை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லத்திகள், பாலிகார்பனேட் தெர்மோ பிளாஸ்டிக் கூட்டமைப்புடன் கார்ப்பனேட் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. தன் நிலையில் இருந்து சிறிதளவு மட்டுமே வளையும் தன்மைகொண்டவை, இந்த லத்திகள். 



மரத்தினால் தயார் செய்யப்படும் லத்திகளோ, திசைவேகத்துக்கு எதிரே படும் பொருள்களின் மீது பட்டு, அழுத்தத்தினால் சிதறி உடையும்.  ஆனால், பாலிகார்பனேட் லத்திகள் அப்படிக் கிடையாது. தொழில்நுட்பரீதியில் பாலிகார்பனேட் லத்திகள் மற்றும் குழாய்கள் அழுத்தத்தினால் நெளியுமே தவிர உடையாது. இதை, குவாலிட்டி டெஸ்ட் செய்வதற்காக, பெரிய இரும்புக் கம்பிகளில் முழு வேகத்தில் செலுத்தினால்கூடச் சிறிதளவும் சேதம் ஏற்படாது. இதன் குவாலிட்டி டெஸ்ட்டை, வீடியோவில் பார்ப்பவர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள். காரணம், இந்த லத்திகளை... இரண்டு இடுக்குகளில்வைத்து முழு அழுத்தம் கொடுத்தாலும் அதன் வடிவம் சிறிதளவு மட்டுமே மாறி, பிறகு தன் நிலைக்கே திரும்பிவிடும்.
அப்படிப்பட்ட பாலிகார்பனேட் பாதுகாப்பு லத்திகளைக்கொண்டு தாக்கினால், மனித உடலின் எலும்புகள் உடையாமல் என்ன செய்யும்? இதைத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில் பயன்படுத்தியுள்ளனர் நம் காவலர்கள். 
http://www.vikatan.com/news/tamilnadu/79405-lathi-used-by-police-to-attack-youths.art