ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

கடந்த காலங்களில் நடந்த அரசியல் குதிரை பேரங்கள்

குதிரை பேரத்தில் இருந்து காப்பதற்காக, சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் கடந்த காலங்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
ஆந்திராவில், கடந்த 1984 ஆகஸ்டில், அப்போது முதலமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் அரசியல் சதி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக என்.பாஸ்கர ராவ் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது என்.டி.ஆர். தனது ஆதரவு எம்எல்ஏக்களை மைசூரில் உள்ள சொகுசு விடுதிக்கு கொண்டு சென்று தங்கவைத்தார்.
ஆந்திராவில், கடந்‌த 1995ஆம் ஆண்டு என்.டி. ராமாராவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரை ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தார். நட்சத்திர விடுதி வாயிலின் முன் நின்று ராமாராவும், அவரது மனைவி லட்சுமி பார்வதியும் உணர்ச்சி பொங்க வேண்டியபோதும், அவர்களுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் யாரும் வர‌வில்லை.
கோவாவில், கடந்த 2005ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த சில நாட்களில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் 12 பேர் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது காங்கிரஸ் ஆட்சியமைக்க ஒரு சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டதால், அக்கட்சியிடமிருந்து தங்கள் எம்எல்ஏக்களை காக்க பாரதிய ஜனதா இந்த நடவடிக்கையில் இறங்கியது.
ஜார்க்கண்டில் கடந்த 2006ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியை முறியடிப்பதற்காக, அர்ஜூன் முன்டா 40 எம்எல்ஏக்களுடன் ராஜஸ்தான் சென்றார்.
2007ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தில் கெகாங் அபாங்கை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அந்தப் பதவியை அடைய டோர்ஜி காண்டு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் விளைவாக, 40 எம்எல்ஏக்கள் குர்கானில் உள்ள சொகுசு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உத்தராகண்டில், கடந்த ஆண்டு முதலமைச்சர் ஹரிஷ் ராவத் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, கட்சி மாறக் கூடும் என்ற அச்சம் காரணமாக பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 27 பேர் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.