2020 ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட உயர்மட்ட தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் ஈரானில் நடைபெற்ற விழாவில் 'பயங்கரவாத தாக்குதல்களால்' ஏற்பட்ட இரண்டு வெடிப்புகளில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என்று ஈரானிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
தென்கிழக்கு நகரமான கெர்மனில் உள்ள சுலைமானி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் நடந்த ஆண்டு நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களால் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன" என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து, ஈரானின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் பாபக் யெக்டபராஸ்ட் கூறுகையில், “இந்தத் தாக்குதல்களில் 73 பேர் கொல்லப்பட்டனர்; 170 பேர் காயமடைந்தனர்” என்றார்.
சுலைமானியின் மரணத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்க நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் கூடியிருந்த விழாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக சில ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கெர்மன் மாகாண ரெட் கிரசென்ட்டின் தலைவர் ரெசா ஃபல்லா மாநில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துவருகிறோம். எனினும் சாலைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது” என்றார்.
source https://tamil.indianexpress.com/international/over-100-killed-in-terrorist-attacks-near-iranian-guards-commander-soleimanis-tomb-during-ceremony-2317051