மாலத்தீவு ஜனாதிபதி மொஹமது முய்ஸு, இந்தியா தனது இராணுவ வீரர்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார், என மாலத்தீவு, இந்திய ராணுவத்தை வெளியேற்ற முயன்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மாலேயில் ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
அரசின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி அலுவலகத்தின் பொது கொள்கை செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி மொஹமது முய்ஸு முறைப்படி கேட்டுக் கொண்டதாக சன்ஆன்லைன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
“இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்க முடியாது. இது ஜனாதிபதி டாக்டர் மொஹமது முய்ஸுவின் கொள்கை மற்றும் இந்த நிர்வாகத்தின் கொள்கையாகும்," என்று அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறினார்.
மாலத்தீவும் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட மையக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு தனது முதல் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது.
இந்த சந்திப்பில் இந்திய தூதர் முனு மஹாவாரும் கலந்து கொண்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை உறுதி செய்த அப்துல்லா நஜிம் இப்ராஹிம், மார்ச் 15க்குள் துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்பதே கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும் என்று கூறினார்.
ஊடக அறிக்கையை இந்திய அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை அல்லது அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றவுடன், சீனாவுக்கு ஆதரவான தலைவராகக் கருதப்படும் மொஹமது முய்ஸு, இந்தியா தனது ராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு முறைப்படி கேட்டுக் கொண்டார். மேலும் இந்த கோரிக்கையை இந்தியாவிடம் வைக்க மாலத்தீவு மக்கள் தனக்கு "வலுவான ஆணையை" வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மொஹமது முய்ஸு அரசாங்கத்தின் மூன்று துணை அமைச்சர்கள் இழிவான கருத்துகளைப் பதிவிட்டதன் பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வந்துள்ளது.
மொஹமது முய்ஸு மூன்று அமைச்சர்களையும் அவர்களின் சமூக ஊடக பதிவுகளுக்குப் பிறகு இடைநீக்கம் செய்தார், அந்தப் பதிவுகள் இந்தியாவில் கவலையைத் தூண்டியது மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளின் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது. சீன சுற்றுலாப் பயணிகள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
சீனாவிற்கான தனது பயணத்தின் போது, மொஹமது முய்ஸு மாலத்தீவை சீனாவிற்கு நெருக்கமாக இணைக்க முயன்றார். சீனாவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மொஹமது முய்ஸூ இந்தியாவை மறைமுகமாகத் தாக்கினார்.
எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், மொஹமது முய்ஸூ கூறினார்: "நாங்கள் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் அது எங்களை கொடுமைப்படுத்துவதற்கான உரிமத்தை உங்களுக்கு வழங்காது." மற்ற நாடுகளிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து மற்றும் நுகர்பொருட்களின் இறக்குமதியைப் பாதுகாப்பது உட்பட, இந்தியாவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் திட்டங்களையும் மொஹமது முய்ஸூ அறிவித்தார்.
“நாங்கள் யாருடைய கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு, ”என்று மொஹமது முய்ஸூ வேலனா சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறினார். ஒரு நாட்டின் அளவு என்னவாக இருந்தாலும், அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என்று அவர் கூறினார்.
மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்புற தாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் உறுதியளித்தார். முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட இந்தியாவுடன் 100 க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும் மாலத்தீவு மதிப்பாய்வு செய்து வருகிறது.
மொஹமது முய்ஸுவின் சீனாவிற்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணம், பதவியேற்ற பிறகு அவரது முதல் பயணமாகும். அதிபர் ஜி ஜின்பிங்குடன் மொஹமது முய்ஸூ பேச்சுவார்த்தை நடத்தினார், இரு நாடுகளும் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
"இரு தரப்பும் தங்களின் முக்கிய நலன்களைப் பாதுகாப்பதில் ஒருவரையொருவர் உறுதியாக ஆதரிப்பதைத் தொடர ஒப்புக்கொள்கிறார்கள்" என்று ஒரு கூட்டு அறிக்கை கூறுகிறது. மாலத்தீவின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் சீனா உறுதியாக ஆதரிக்கிறது, மாலத்தீவின் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை ஆராய்வதை மதிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது, மேலும் மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிப்புற தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறது" என்று எந்த நாட்டையும் குறிப்பிடாமல் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள்: PTI
source https://tamil.indianexpress.com/india/maldives-sets-march-15-deadline-for-india-to-pull-out-troops-amid-deepening-row-2382972