செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் – 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்படும்!

 


தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது,

“ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் வழங்கப்படும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும்.

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு. ‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ உருவாக்கப்படும். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை உயர்த்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிய ரக கரும்பு விதைகள் வழங்க ரூ.7.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.


source https://news7tamil.live/one-village-one-crop-program-program-to-be-implemented-in-15280-villages.html