தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழகம் வந்துள்ள பாரத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூறியதாவது: “தி.மு.க கூட்டணிக் கட்சிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதி கேட்கிறது என்ற கேள்விக்கு.... நான் சிட்டிங் எம்.பி 4,70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கும் கேட்க உரிமை இருக்கிறது. கூட்டணி கட்சியினர் அவர்களும் கேட்கலாம். கண்டிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தான் சீட் கேட்பேன் உரிமை இருக்கிறது போட்டிடுவேன்” என்றார்.
கண்டா வர சொல்லுங்க, திருச்சியில் எம்.பி-யை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது என்ற செய்தியாளர் கேள்வியால் கோபம் அடைந்த திருநாவுக்கரசர், “யார் சொல்கிறார்கள்? நீ காசு வாங்கி விட்டு சொல்கிறாய், நீங்க எந்த செய்தியாளர்? நீங்கள் என்னை முதல் முறை தான் பார்க்கிறீர்களா உண்மையை சொல்லவில்லை, நீ பொய் சொல்கிறாய், காசு வாங்கிகிட்டு சொல்கிறாய், நீ யாருக்கோ அடிமையாகி விட்டு சொல்கிறாய், சீமான் பேசுவது போல் கெட்ட வார்த்தையில் பேசினால் தான், நீ அடங்குவாய்” என்று ஆவேசமாகப் பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க-வினரும் அ.தி.மு.க-வினரும் எல்லா தொகுதிகளிலும் எம்.பி-யை காணோம் என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது குறித்த கேள்விக்கு, எம்.பி.கள் எல்லாம் அமெரிக்காவா போனோம். இங்கதான் அனைவரும் இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி பற்றி மோடி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், இதை ஓட்டுக்காக பிரதமர் பேசுகிறார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாததால் அந்த ஓட்டுகளை பிரிப்பதற்காக உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு நீங்கள் செல்வதாக தகவல் வெளியாகிறது. அதை சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன். நான் இனி சீமான் போல் தான் பேசுவேன். நான் 50 வருட அரசியல்வாதி, யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கான தரம் வேண்டும். இந்த கேள்வியை முதல்வர் ஸ்டாலினிடம் உங்களால் கேட்க முடியுமா? உடன் உள்ளவர்கள் உங்களை அடி மொத்தி விடுவார்கள் என்றார். சில youtube சேனல்கள் பிழைப்பதற்காக நான் பேட்டி கொடுக்கிறேன். மற்றவர்கள் யாரும் இது போல் பேட்டி கொடுக்க மாட்டார்கள். அவர்கள் இதை நம்பி இருக்கிறார்கள். அதனால், பேட்டி கொடுக்கிறேன். ஆனால், அவர்கள் இஷ்டத்திற்கு ஒளிபரப்புகிறார்கள். நீங்கள் நினைத்தாலும் என்னை அனுப்ப முடியாது. நான் தான் முடிவு எடுக்க முடியும்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, சேவாதள முரளி, கே. கே.சி. மாநிலத் தலைவர் அபுதாஹிர், கே.ஆர். ஆர். ராஜலிங்கம் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/congress-mp-thirunavukarasar-angry-speech-will-slap-by-chappal-4106669