திங்கள், 19 பிப்ரவரி, 2024

புதிதாக தாயுமானவன் திட்டம்: ரூ.25,972 கோடி நிதி ஒதுக்கீடு!

 

முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் என்ற புதிய திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்டவை வழங்க ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் கூறினார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார். 

இந்த உரையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 2.2% ஆக குறைந்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.  தாயுமானவன் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.


source https://news7tamil.live/thayumanavar-scheme-fund-allocation-of-rs-25972-crore-to-provide-basic-facilities-education-to-destitute-elderly-children.html