மத்திய பாஜக அரசின் இடைக்கால தடையையும் தாண்டிதான் தமிழ்நாடு சாதித்து வருவதாக தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக அமைக்க இருக்கும் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“2024-ம் ஆண்டு முதல் நலதிட்ட உதவிகளை தென்மாவட்டத்தில் இருந்து துவக்குவது மிக சிறப்பு. நாடாளுமன்றத்தில் தனது கர்ஜனை குரலால் எனது தங்கை கனிமொழி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே குரல் கொடுப்பவர். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பிற்கு ரூ.145 கோடியிலும், நெல்லையில் 802 இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீர்படுத்த ரூ.13 கோடியே 93 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
உங்கள் வாழ்க்கை மேம்பட குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். சில்லாநத்தம் பகுதியில் வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. கொரானா காலத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.4 ஆயிரம் மதிப்பீட்டிலான நிவாரணம் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பேரிடர்களில், மக்களை வெறுமனே பாத்துவிட்டுப்போகிறவர்கள் நாங்கள் இல்லை, மக்களோடு இருந்து மறுகட்டமைப்பிலும் உதவுகிறோம். அதன் எடுத்துகாட்டு தான் இந்த நிகழ்ச்சி.
ரூ.666.36 கோடி மதிப்பீட்டில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 6% சிறப்பு சலுகை வட்டி விகிதித்தில், 670 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட மழை வெள்ள பாதிப்புக்கு என நிதி வழங்காத நிலையிலும் ஸ்டாலின் அரசு மக்களுக்காக நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
தூத்துக்குடி வேம்பாரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பனை பொருட்கள் தயாரிப்பு குறும்குழுமம், ரூ.10 கோடியில் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் குறும்குழுமம் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் 5 கோடி மதிப்பீட்டில் வர்த்தக கட்டிடம், அம்பாசமுத்திர மருத்துவமனையில் புதிய மருத்துவமனை கட்டிடம், வள்ளியூரில் தலைமை மருத்துவமனை, நெல்லை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு, ரூ.5.4 கோடி மதிப்பீட்டில் மாஞ்சோலையில் சாலை சீரமைப்பு, நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி ஆகியவை விரைவில் தொடங்கப்படும்.
இரண்டு இயற்கை பேரிடர் காலத்திற்கும் சேர்த்து ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்கப்பட்டது. உங்களிடம் சாதுர்யம் இருந்தால் நீங்கள் சாதித்துகொள்ளுங்கள் என ஆணவமாக பதில் அளிக்கின்றனர். சாதுர்யம் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அனைத்து துறைகலும் முன்னேறி வருகிறது. தேர்தலில் வாக்குக்கேட்க மக்களை சந்திக்கப் போகிறோம் என்று பயம் கூட மத்திய அரசுக்கு இல்லை. தமிழ்நாட்டை பாராமுகமாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல.
மத்திய பாஜக அரசின் இடைக்கால தடையையும் தாண்டிதான் தமிழ்நாடு சாதித்து வருகிறது. தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதால் தான் தலைசிறந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க வருகின்றனர். மக்களுக்காக களத்தில் இருப்பது தான் திமுகவின் அரசு. உங்கள் குடும்பத்தின் ஒருவனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருப்பேன்” இவ்வாறு தெரிவித்தார்.
source https://news7tamil.live/tamil-nadu-is-achieving-beyond-the-obstacles-of-the-central-bjp-government-chief-minister-m-k-stals-speech.html