வியாழன், 22 பிப்ரவரி, 2024

புயல், பெருமழையினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது!” – அமைச்சர் பெரியகருப்பன்

 

மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, “மிக்ஜாம்” புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அரசு ஆணை வெளியிடப்பட்டு “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலமும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் 4 % வட்டியில் அதிகபட்ச கடன் தொகை 5.10,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200/- என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் 4% வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1000/- வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் டிசம்பர் 2023-இல் பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு ரூ.10,000 வரை  4% வட்டிவிகித்ததிலும், .ரூ.1 0.001 முதல் ரூ.1,00,000 வரை 10% வட்டிவீதத்திலும் (பயனாளிகளிடமிருந்து 6% வட்டியும், அரசிடமிருந்து 4% வட்டிமானியமாகவும் பெறப்படும்), தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் மற்றும் ஆத்தூர் நகரங்களில் உள்ள சிறுவணிகர்களுக்கு ரூ.100,000 முதல் ரூ.3,00,000 வரை 8.50% வட்டி வீதத்தில் கடன் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 17.02.2024 வரை ரூ.10,000 வரையிலான கடன்களை 11,949 சிறுவணிகர்கள் ரு.1.194.35 லட்சம் அளவிற்கு, ரூ10,001 வரையிலான ரூ.1,00,000 வரையிலான கடன்களை 3480 சிறுவணிகர்கள் ரூ.1383.77 லட்சம் அளவிற்கும், இதுமட்டுமின்றி ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேலான கடன்களை 42 சிறுவணிகர்கள் ரூ.43.00 லட்சம் அளவிற்கும் ஆக மொத்தம் 15,471 சிறுவணிகர்கள் ரூ.26.21 கோடி அளவிற்கு கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் மிக்ஜாம் புயல் மற்றும் பெரு மழை பாதிப்பிற்கு பின்பு மேற்கண்ட 8 மாவட்டங்களில் பயிர்க்கடன் 67,293 நபர்களுக்கு ரூ.421.20 கோடி, (சென்னை தவிர கேசிசி கால்நடை கடன் 9,700 நபர்களுக்கு ரூ.64.58 கோடி (சென்னை தவிர) மத்திய கால வேளாண் கடன் 608 விவசாயிகளுக்கு ரூ.13.03 கோடி, மகளிர் சுய உதவி குழுக்கடன் 2,130 நபர்களுக்கு ரூ.151.64 கோடி, TABCEDCO கடன் 218 நபர்களுக்கு ரூ3.47 கோடி, TAMCO கடன் 175 நபர்களுக்கு ரூ.2.25 கோடி, NHFDC கடன் 293 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.12 கோடி, தாட்கோ கடன் 187 நபர்களுக்கு ரூ7.09 கோடி, சிறுவணிக கடன் 10,948 சிறுவணிகர்களுக்கு ரூ.36.62 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் (MSME) 614 பயனாளிகளுக்கு ரூ.3.73 கோடி. பணிபுரியும் மகளிர் கடன் 156 மகளிருக்கு ரூ.5.71 கோடி, மகளிர் தொழில் முனைவோர் கடன் 503 மகளிருக்கு ரூ.2.44 கோடி ஆக மொத்தம் 92,825 நபர்கள் ரூ.712.87 கோடி அளவிற்கு கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சிறப்பு கடன் முகாம்களில், சிறுவணிகர்கள் வங்கிக் கிளைகளை நேரில் அணுகியோ அல்லது உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை கூட்டுறவுத் துறையின் வலைதளத்தில் உள்ள இணையவழி விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பித்தோ பயனடையுமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

source https://news7tamil.live/rs-26-21-crore-loan-given-to-small-businessmen-affected-by-storm-and-heavy-rain-minister-periyakaruppan.html