சனி, 17 பிப்ரவரி, 2024

தமிழக நெருக்கடியை ஆழப்படுத்திய ஆளுநர் ன் வெளிநடப்பு: ஆளுநர் பதவியை ரத்து செய்வதற்கான நேரமா?

 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் திங்கள்கிழமை, மாநில அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கவில்லை. மாறாக, முந்தைய ஆண்டைப் போலவே வெளிநடப்பு செய்த அவர், பின்னர், தமிழக அரசு தயாரித்த கருத்துக்களுடன் உடன்படவில்லை என்று கூறினார். இவ்வாறான சூழ்நிலைகளில், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்திற்குள் உள்ள அடிப்படை முரண்பாடுகள் முன்னுக்கு வந்து அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைத்து, இந்தியக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்த பிற நிகழ்வுகளும் உண்டு. இத்தகைய நடவடிக்கைகள், நவீன ஜனநாயக அமைப்பில் ஆளுநரின் பதவியே அதன் அரசியல் சாசனப் பயனை இழந்துவிட்டது என்ற நீண்டகால மற்றும் அழுத்தமான வாதத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுனர்களின் தலையீடு அதிகரித்துள்ளது. வழக்கமாக, கேரளா, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இத்தகைய அரசியலமைப்பு உரசல்களைக் கண்டுள்ளன, இது இறுதியில் ஆட்சியைத் தடுக்கிறது. இந்த மாநிலங்களில் பல, அரசியலமைப்புத் திட்டத்தின்படி மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநர்களுக்கு வழிகாட்டுதல்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. சில சந்தர்ப்பங்களில், தெலங்கானாவில், 2022 சட்டமன்றக் கூட்டத்தொடர் வழக்கமான ஆளுநர் உரையின்றி தொடங்கியது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், முந்தைய ஆண்டு ஆளுநர் உரையின் அங்கீகரிக்கப்படாத மற்றும் சுருக்கப்பட்ட கருத்தை ரவி வாசித்ததற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டு அமர்வில், சட்டசபை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் போது, அவர் இதேபோன்ற வெளியேற்றத்தை நடத்தினார். ஆளுநர் உரையில், தவறான தகவல்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான பல பத்திகள் உள்ளன என்றும் அவற்றைப் படிப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து ஆகும் என்றும் கூறினார்.

ஆளுநர் மாளிகை அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டது, அதில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் விவகாரத்தில், எந்த ஒரு உண்மைச் சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் விளக்கம் கேட்கவில்லை என்று மாநில சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இரண்டாவதாக, அலுவலக ரீதியான, அரசு நிகழ்வுகளில் பின்பற்றப்படும் நெறிமுறை என்பது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிவடையும் என்பது தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்ததே. தற்போதைய அமர்விலும் நன்கு நிறுவப்பட்ட இந்த நெறிமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல், ஏதோ தார்மீகக் கடமைகளில் தவறிவிட்டதாகவோ அல்லது தேசிய கீதத்திற்கு எதிரான செயல்திட்டத்தை வைத்திருப்பதாகவோ ஆளுநர் தனது மாநில அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்குவது போல் தெரிகிறது. இந்த இரண்டு வாதங்களும் ஆதாரமற்றவை, ஆர்.என். ரவி வகிக்கும் அரசியலமைப்பு அலுவலகத்திற்கு (பதவிக்கு) பொருந்தாது.

அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி மட்டுமே ஆளுநர் செயல்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆளுநர் உரை என்று வரும்போது, இவை சட்டசபை கூட்டத் தொடரின் ஒரு வழக்கமான சிறு பகுதி மட்டுமே. அவை மாநில அரசின் சார்பில் வெளியிடப்பட்ட முறையான அறிக்கைகள் அல்ல.

மாநிலத்திலும் மத்தியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையே ஆளுநர்களின் பங்கு எப்போதும் ஒரு பாலமாக கருதப்படுகிறது. ராஜ்பவனில் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அரசியற் திறன் கொண்ட ஒருவர் இருந்தால், நாட்டின் பெரிய நலன்கள் சிறப்பாகச் சேவையாற்றும் என்பதுதான் உண்மையான யோசனை. துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய நிகழ்வுகள், பல்வேறு ஆளுநர்களின் நடவடிக்கைகள், மத்திய - மாநில உறவுகளின் தீர்க்கப்படாத விவகாரங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று சிந்திக்க வழிவகுத்துள்ளது.

இத்தகைய சம்பவங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் ஆளுநரின் பங்கு மற்றும் பதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை மீண்டும் உருவாக்கியுள்ளன. ஆளுநருக்கு ஆட்சி விவகாரங்களில் விருப்புரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பலமுறை கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு, ஏ.ஜி. பேரறிவாளன் எதிர் மாநில அரசு வழக்கில் (2022)-ல் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம் ஆளுநரை மாநில அரசாங்கத்திற்கான ஒரு அடையாள வெளிப்பாடு என்று அழைத்தது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது என்று வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய அரசியலமைப்புச் சட்டப் புறக்கணிப்புகளைக் கையாள்வதில் சுணக்கம் காட்டுவதுடன், இது போன்ற விஷயங்களில் ஆளுநரின் தன்னிச்சையான பங்கைக் குறைத்து விட்டது. எனவே, இது ஒரு நிறுவனமாக ஆளுநர் பதவியின் அவசியம் குறித்த பெரிய கேள்வியை எழுப்புகிறது.

ஆளுநர் அலுவலகத்தால் அரசியலமைப்பு திட்டத்திற்கு மதிப்பு கூட்டுவது என்பது மிகச் சிறியதாகவே தெரிகிறது.

“நாம் வழக்கமான காரணங்களுக்காக மட்டுமே பெயரளவில் தலைமையாக நீடிக்கச் செய்து வருகிறோம். அரசியலமைப்பு ஜனநாயகத்தை மேம்படுத்த நமக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. எனவே, முதலமைச்சர்கள் வடிவத்திலும், அமைச்சர்கள் குழுவின் கூட்டுப் பொறுப்பிலும் உண்மையான நிர்வாகத் தலைவர்களுடன் அரசாங்கங்கள் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. கூட்டாட்சி கட்டமைப்பை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைத்துள்ள தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடி ஒரு எச்சரிக்கை மணி. வருங்கால நாடாளுமன்றம் ஆளுநர் பதவிகளை தேவையற்ற காலனித்துவ காலச் சின்னங்களாகக் கருதி, அவற்றை முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடும்.

இந்த கட்டுரையை எழுதியவர், மனுராஜ் சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசிய ஊடக செய்தித் தொடர்பாளர், இக்கட்டுரைக்கான உள்ளீடுகளை வழங்கியவர் திலீபன் பி.


source https://tamil.indianexpress.com/india/governor-rn-ravi-walkout-from-assembly-deepens-tamil-nadu-crisis-time-to-abolish-governorships-3823211