வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மாட்டிறைச்சி வைத்திருந்த மூதாட்டியை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பஸ்: டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப் பதிவு

 

Dharmapuri: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் பகலில் காய்கறி வியாபாரமும், மாலையில் மாட்டு இறைச்சி பக்கோடாவும் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல ஆரூரில் மாட்டு இறைச்சி வாங்கிய அவர் தனது கிராமத்துக்கு செல்ல அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். 

அப்போது, பஞ்சாலையிடம் பயணச்சீட்டு வழங்க வந்த நடத்துநர் ரகு என்பவர் அவரது கிராம பெயரை ஏளனமாக சுட்டிக்காட்டி மாட்டு இறைச்சி வைத்துள்ளாயா என கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பேருந்தில் இருந்து இறங்குமாறு வற்புறுத்திய போது அடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுங்கள் என்று அந்த பெண் கெஞ்சியுள்ளார். 

ஆனால், மாட்டு இறைச்சி வைத்துக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறிய நடத்துநர் வனப்பகுதியில் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால், அந்த பெண் 3 கி.மீ தூரம் நடந்தே ஊருக்கு வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த பாஞ்சாலையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த குறிப்பிட்ட பேருந்து திரும்பி வந்தபோது மறியலில் ஈடுபட்டனர். 

இந்தப் புகாரை தொடர்ந்து நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிகுமார் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில்,  இந்த விவகாரத்தில் ஓட்டுநர் ரகு, நடத்துநர் சசிகுமார் ஆகிய இருவர் மீதும் காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-bus-conductor-and-driver-booked-for-dropping-old-woman-half-way-carrying-beef-tamil-news-3918982